ஹிஜாஸ் ஹிஸ்புள்ளாவிற்கு எதிராக உரிய ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்காத குற்றத்தடுப்பு பிரிவினர்
- எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத் -
பயங்கரவாத தடைச்சட்டத்தின் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளாவிற்கு எதிரான சாட்சி விசாரணைக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் தேவையான மூலப் பிரதிகளுடனான உரிய ஆவணங்கள் மன்றில் சமர்ப்பிக்காதததையடுத்து கடுமையாக எச்சரிக்கை செய்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவண்ந்துருகொட இவ்வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி மதுரங்குளி சுகைரிய்யா மத்ரஸா மாணவர்களுக்கு அடிப்படைவாத கருத்துக் தொடர்பில் விரிவுரைகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்ட சட்டத்திரணியும்,மனித உரிமை செயற்பாட்டாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஜஸ்புள்ளா மீதான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை புத்தளம் மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது முறைப்பாட்டாளர் சார்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி மற்றும் சாட்சியாளர் சார்பில் பிரதி சொலிசிட்டார் ஜெனரல் லக்மின் ஹிரியாவ ஆஜரானதுடன்,சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
முதலில் சாட்சியாளரை பிரதி வாதிசார்பிலான சட்டத்தர குறுக்கு விசாரணை செய்த போது மேற்படி தம்மால் வழங்கப்பட்ட முதலாவது வாக்கு மூலப்பதிவில் ஹிஜாஸ் ஹிஸ்புள்ளாாவை போன்ற அடையாளம் காணக் கூடிய உடல் அமைப்பு கொண்ட எவரும் வரவில்லை என்பதை தான் குறிப்பிட்டதாகவும்,இந்த மன்றில் தெரிவித்தார்.தான் விசேட வாக்கு மூலமொன்றினை மஜிஸ்திரேட் நீதவானுக்கு வழங்க அவரது அறைக்கு செல்லும் போது தன்னுடன் ஒரு சட்டத்தரணி வந்ததாகவும் தெரிவித்த சாட்சியாளர், அந்த சட்டத்தரணி எனக்கு உதவியாக வருவதாகவும்,தனக்காக குற்றத்தடுப்பு பிரிவினர் ஆஜராகுமாறும் சட்டத்தரணி தன்னிடம் தெரிவித்தாக இதன் போது சாட்சி திறந்த மன்றில் குறிப்பிட்டார்.இதே வேளை முதலாவது குற்றம் சுமத்தப்பட்டவரின் புகைப்படத்தை பலமுறை குற்றத்தடுப்பு பிரிவினர் தன்னிடம் காண்பித்தாகவும் அவர் குறுக்கு விசாரணையினை போது குறிப்பட்டார். பிரதி வாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி குற்றத்தடுப்பு பிரிவினரால் சாட்சியாளர் என்பவரின் பதிவு செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிய வாக்கு மூலத்தின் இறுதியில் மேற்படி சாட்சியாளரினால் இடப்பட்ட கையொப்பத்தினை உறுதிப்படுத்துவது அவசியமென்பதால் அதனது மூலப் பிரதியுடன் ஒத்து நோக்குவதற்கான அனுமதியினை வழங்க வேண்டும் என முன் வைக்கப்பட்ட கோறிக்கையினை நீதவான் ஏற்றுக் கொண்டதுடன்,அதனை மன்றில் சமர்ப்பிக்குமாறு அரச தரப்பு பிரதி சொலிசிட்டர் ஊடாக குற்றத்தடுப்பு அதிகாரியிடம் முன் வைக்கப்பட்ட போது இந்த ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க எடுத்துவரப்படவில்லை என தெரிவித்ததையடுத்து,நீதவான் கடும் எச்சரிக்கையினை விடுத்தார்.
தற்போதைய நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலையிலும் அரச தரப்பு மற்றும் சட்டத்தரணிகள்,சாட்சியாளர் மன்றில் பிரசன்னமாகியிருக்கும் நிலையில் இதற்கு தேவையான ஆவணங்களை குற்றத் தடுப்பு பிரிவினர் கொண்டுவராமையானது அவர்களது பணியின் திறமையற்ற தன்மையாக தாம் பார்ப்பதாகவும்,இது தொடர்பில் சிரேஸ்ட பிரதி பொலீஸ் மா அதிபருக்கு இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிரான உரிய நடவடடிக்கைகள் எடுக்குமாறு நீதிமன்றம் கட்டளையினை பிறப்பிப்பதாக நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து இரு தரப்பு சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டினையடுத்து இந்த சாட்சி விசாரணையினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம், மற்றும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதென நீதவான் மன்றில் அறிவித்தார்.
இதே வேளை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளாவுக்கு எதிராக சாட்சியமளித்த சாட்சியாளருக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மன்றில் ஏற்கனவே முன்வைத்த வேண்டுகோளின் பேரில் பொலீஸாரினால் அவருக்காக பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.இந்த பாதுகாப்பினால் தனது பொருளாதாரம் பெரிதும் பாதித்துள்ளதால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொலீஸ் பாதுகாப்பினை விலக்கி கொள்ள உதவுமாறு சாட்சியாளர் மன்றில் தெரிவித்ததுடன்,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சாட்சியாளரின் வேண்டுகோளை கவனத்தில் கொள்ளுமாறும்,அவருக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் பிணையாளி சார்பில் இல்லை என்பதையும் மன்றில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நிதிமன்ற நீதிபதி சாட்சியாளரின் பொலீஸ் நிலைய பிரிவு பொறுப்பதிகாரிக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக இதனை நடை முறைப்படுத்துவதற்கான அனுமதியினை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment