Header Ads



அதிகாரியின் தவறால் கைநழுவிய 50 மில்லியன் டொலர்


விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதி உதவித் திட்டங்களை கையாளும் உயரதிகாரி ஒருவரின் செயல்திறனின்மையால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் 50 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை விவசாயிகள் இழந்துள்ளதாக அறிய வருகிறது. கடந்த ஆண்டு (2021) இலங்கைக்கு கிடைத்த Inclusive Connectivity and Development Project (ICDP) அபிவிருத்தித் திட்டத்தையே இவ்வாறு இழக்க நேரிட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் மாதத்துக்குள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையால் அத்திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், கடந்தாண்டு விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதி திட்டப் பிரிவுக்குக் கிடைத்த 82 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டமான SARP திட்டம் (Smallholder Agribusiness and Resilience Project) தொடர்பில் இன்னும் எந்த வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லையென அறிய வருகிறது.

இத்திட்டம் செயல்பாட்டில் இல்லையென்றாலும், அதற்கான பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டப் பணிப்பாளருக்கு ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான சம்பளம், உத்தியோகபூர்வ வாகனம் என்பன கிடைப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டுக்கு கிடைத்த இவ்வாறான பெறுமதிமிக்க திட்டங்கள் இரத்தாவதற்கு காரணமான அதிகாரிகளின் திறமையின்மை குறித்தும் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.