Header Ads



2 இலட்சியங்களுக்காக அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தேன், அந்த இரண்டும் நிறைவேறிவிட்டன - பசில்

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இரண்டு அபிலாஷைகளுடன் தான் அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியதாக தெரிவித்தார்.

முதலாவது தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது, இரண்டாவது 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் உயர் பதவியில் அமர்த்துவதாகும்.

இந்த இரண்டு அபிலாஷைகளுடன் பின்னர் நிறைவேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அப்போது எனக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று 2015ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது என் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டு.

எனக்கு எதிராகவும் அவர்கள் வழக்குகளை தாக்கல் செய்தனர், கடந்த வாரம் நான் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அந்த வழக்குகளை எதிர்கொள்வதே எனது முதல் லட்சியமாக இருந்தது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு நானே காரணம் என எனக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டும் இருந்தது. அதனால் அவரை மீண்டும் இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் உயர் பதவியில் அமர்த்த விரும்பினேன். அதனால் என் எதிர்பார்ப்புகள் இரண்டும் நிறைவேறியது.

மேற்குறிப்பிட்ட இரண்டு இலட்சியங்களை அடைவதைத் தவிர நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் அல்லது நிதியமைச்சர் பதவியை ஏற்கும் எண்ணம் தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 2021 ஜூலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்திற்கு அமைய தான் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை நிதி அமைச்சராக நியமித்ததாகவும் அவர் கூறினார்.

“எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த ஆண்டு ஜூலை வரை நான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை.

நிதியமைச்சர் என்ற முறையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்று நினைக்கிறேன், ஆனால் மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் என்னால் செய்ய முடியவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.   TW

No comments

Powered by Blogger.