பிரசன்ன ரணதுங்கவிற்கு 2 வருட கடூழிய சிறை, 25 மில்லியன் ரூபா அபராதம்
2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டமையால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரசன்ன ரணதுங்கவிற்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 மில்லியன் ரூபா அபராதத்தை விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 09 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈட்டை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவியான மொரின் ரணதுங்க மற்றும் மற்றுமொரு சந்தேகநபரும் அனைத்து குற்றஞ்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மீதொட்டமுல்ல பகுதியில் சதுப்பு நிலமொன்றை நிரப்புவதற்கு அனுமதி வழங்கியமை மற்றும் அங்கு அனுமதியின்றி குடியிருந்தவர்களை வௌியேற்ற கிஹான் மெண்டிஸ் என்ற வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா கோரி அச்சுறுத்தியமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment