இஸ்லாமிய பக்தர்களுக்கு JVP யின் நல்வாழ்த்து, பெருநாள் தினத்தில் அநுரகுமார விடுத்துள்ள அழைப்பு
இஸ்லாமிய பக்தர்களால் ஒரு மாதகாலமாக அனுஷ்டிக்கப்பட்ட நோன்பின் முடிவினைக் குறிக்கின்ற நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது. அந்தப் பெருநாளைக் கொண்டாடுகின்ற இஸ்லாமிய பக்தர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் சமூக நெருக்கடியும் இலங்கை மக்கள் வாழ்க்கையை ஆரத்தழுவியுள்ள தருணத்தில் வழமையான கோலாகலத்துடன் அதனைக் கொண்டாட இயலாதுள்ள சந்தர்ப்பத்திலேயே இப் பெருநாள் பிறந்துள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள், ஒளடதங்கள் உள்ளிட்ட நுகர்வுப் பண்டங்களும் அனைத்துச் சேவைகளினதும் விலைகள் பாரியளவில் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளதுடன், நாட்டில் உருவாகிவருகின்ற உறுதியற்ற நிலைமையின் காரணமாக சம்பளமும் ஈட்டல்களும் மதிப்பிழந்து வருவதோடு தொழில்முயற்சிகள் வீழ்ச்சியடைந்தும் வருகின்றன.
எனினும் இந்த அனைத்துவிதமான சிரமங்களுக்கு மத்தியிலும் பெருநாள் வைபவத்தின் அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் அதனை இயலுமானவரை கொண்டாடுவதற்கு இந்த நிலவுகின்ற நிலைமையை தடையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம். ஏனெனில் ஒருமாத காலமாக நோன்பு பிடித்து சிரமமமான வாழ்க்கையை கழிக்கின்ற இஸ்லாமிய பக்தர்கள் தமது சகோதர மக்களுக்கு சகலவிதமான உதவிகளையும் புரிவது ரமழான் நோன்பின் அர்த்தமாக அமைவதாலாகும்.
நிகழ்கால முதலாளித்துவ சமூகத்தினால் மனிதர்களிடமிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கின்ற எளிமை, பொதுநலம் போன்ற பண்புகளை மீண்டும் வாழ்க்கைக்குள் வரவழைத்துக்கொள்ளும் செய்தி ரமழான் வழிபாட்டு முறைக்குள் அடங்குவது பாராட்டப்படத் தக்கதொன்றாகும்.
எழுபத்தி நான்கு வருட ஊழல்மிக்க அதிகாரப் பேராசைகொண்ட அரசியலால் நாடும், நாட்டு மக்களும் இட்டுச்செல்லப்பட்டுள்ள பேரழிவினை இன்று மக்கள் என்றவகையில் நாங்கள் அனுபவித்து வருகிறோம். அதைப்போலவே இந்த அதிகாரப் பேராசைகொண்ட அரசியலின் குறுகிய அரசியல் அபிலாசைகளுக்காக இனவாத, மதவாத அடிப்படையில் மனிதர்களையும் மக்கள் சமூகங்களைப் பிரித்து வைக்கின்ற துரதிஷ்டமான போக்கினை நாங்கள் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். எவ்வாறாயினும் இன்றளவில் ஒட்டுமொத்த சமூகமென்றவகையில் இந்த அதிகாரப் பேராசைகொண்ட ஊழல்மிக்க மற்றும் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களின் உண்மையான வடிவத்தை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஊழல்மிக்க மற்றும் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பிளவுபட்டு தனித்தனியாக அல்லது சிறு குழுக்களாகவன்றி ஒட்டுமொத்த சமூகம் என்றவகையில் கூட்டாக எழுந்துநிற்க வேண்டுமென்பதை எமக்கு மெய்ப்பிக்கின்றது. அத்தகைய தருணத்தில் தோழமையின் பெறுமதியை வலியுறுத்துகின்ற நோன்புப் பெருநாள் பிறந்துள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.
நாடும் சமூகமும் புதிய பாதைக்கு திரும்பவேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டுள்ள தனித்துவமான தருணமொன்றில் தோழமையின் பெயரால் ஒரே இலங்கை மக்களென்ற வகையில் கைகோர்த்துக்கொள்ள இலங்கைவாழ் இஸ்லாமிய பக்தர்களுக்கு ஈகைத் திருநாள் பக்கபலமாக அமையுமென நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
மக்கள் விடுதலை முன்னணி
2022.05.03
Post a Comment