இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், அதிகளவில் கொழும்பு பாதிக்கப்படலாம் - பிரதமர் தெரிவிப்பு
- பா.நிரோஷ் -
இந்த வருடத்திற்குள் இலங்கை பாரிய உணவு தட்டுப்பாட்டு பிரச்சனையை எதிர்நோக்கும் , இதன்போது அதிகளவில் கொழும்பு மாவட்ட மக்களே பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த மாவட்டங்களில் வெற்றுக் காணிகளில் பயிர் செய்கைகளை முன்னெடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) இந்த கருத்துக்களை அவர் முன்வைத்தார், அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு நகருக்குள் பெரிய பிரச்சனை உள்ளது. குறிப்பாக எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அதேபோன்று தினசரி உணவுகளுக்கு மக்களுக்கு பணம் போதுமாக இல்லை. இந்த விடயங்கள் தொடர்பில் அடுத்த வாரமளவில் கதைக்கவுள்ளேன்.
இதேவேளை உணவுப் பிரச்சனை கொழும்புக்கு மாத்திரமன்றி உலகில் அனைத்து இடங்களிலும் ஏற்படவுள்ளது. உலக வங்கி இதற்காக 30 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அறிந்தேன். அதேபோன்று அமெரிக்காவின் நிதி அமைச்சர், திறைசேரி செயலாளரும் உலகம் எதிர்நோக்கவுள்ள மிகப்பெரிய பிரச்சனைக்கு தாம் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வருடத்தில் நிச்சயமாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். சில இடங்களில் உணவு இல்லாமல் போகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்படும் நாடுகளில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானும் உள்ளன.
இது தொடர்பில் நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமக்கு உணவு பயிர் செய்கைகளை செய்ய வேண்டியுள்ளது. கொழும்பு மற்றும் மொரட்டுவ, தெஹிவளை அனைத்து பகுதியிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வரவு செலவு திட்டத்தில் நிவாரண அடிப்படையில் நிதி வழங்க ஆலோசித்து வருகின்றோம்.
நாங்கள் இதனை ஒன்றிணைந்தே செய்ய வேண்டும். அடுத்ததாக மத்திய, சிறியை கைத்தொழில் வீழ்ச்சியும் ஏற்படும். இதனால் ஏற்படக் கூடிய நிலைமையை கட்டுப்படுத்த மாவட்ட ரீதியில் குழுக்களை அமைத்து வேலைத்திட்டங்களை செய்வோம் என்றார்.
Post a Comment