காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களா..?
மக்கள் போராட்டத்தில் பிராந்திய சமூக ஆர்வலர்களை வேட்டையாடும் காவல்துறையின் முயற்சியை முறியடிப்போம்!
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தற்போதைய அராசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களை பொலிசார் கைது செய்து அச்சுறுத்திய இரண்டு சம்பவங்கள் தொடர்பாகச் சுதந்திர ஊடகம் இயக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டாமெனப் பொலிஸ்மா அதிபர் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றது.
கடந்த மே மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தேசிய சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் சுரங்க ரூபசிங்கவிற்கு கந்தளாய் வான்எல பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நீங்கப் பெரிய மனித உரிமை ஆர்வலரா? எமது ஓ.ஐ.சி. உங்களுக்குப் பயந்து உள்ளார். நாங்க வீட்டுக்கு வந்து உன்னைப் பார்த்துக்கறோம்." என அச்சுறுத்தியதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (மே மாதம் 03 ஆம் திகதி) அவரின் இல்லத்தின் அருகில் காவல்துறை வாகனம் ஒன்றை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதேவேளை சிவில் உடையில் இருந்த சில நபர்கள் அவரைக் கண்காணித்துள்ளனர். மேலும் சுரங்க ரூபசிங்கவின் உயிருக்குத் தற்போது பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கம்பஹா, யக்கல பிரதேசத்தில் வசித்த இரு இளைஞர்களைக் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்துக்களை வெளியிட்டதற்காக யக்கலை பொலிஸார் நேற்று (02) கைது செய்து தாக்கியுள்ளனர். இளைஞர்களுக்கு எதிராக இதுவரையில் எந்தவொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்யப் பொலிஸார் தவறியுள்ளதாகச் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு குறித்த இளைஞர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களது மோட்டார் சைக்கிளைச் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்றுள்ளதுடன், அதனை மீட்கச் சென்றபோது இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். ‘‘கோல்ஃப் மைதானத்துக்குப் போய் அரசாங்கத்துக்கு எதிராக வாய்ஸ் கட் கொடுத்தீர்கள் அல்லவா? என வினவி குற்றத்தடுப்பு பிரிவின் பிரதம அதிகாரியே தம்மை தாக்கியதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் ஜனநாயக உரிமையை மீறும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை, இந்தச் சம்பவங்களை மிகவும் தீவிரமாகக் கவனம் செலுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், அதனை அறிக்கையிடவும் அதேபோலச் சட்ட சமூகத்துடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுதந்திர ஊடக இயக்கம் எந்நேரமும் தயாராக உள்ளது.
இது போன்ற சம்பவங்கள்குறித்து பொதுமக்கள் சுதந்திர ஊடக இயக்கத்திற்கு தகவல்களைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறது.
லசந்த டி சில்வா
அழைப்பாளர் ஹனா இப்ராஹீம்
செயலாளர்
Post a Comment