பிரதமராக மீண்டும் மஹிந்தவே நியமிக்கப்பட வேண்டும் என பசில் பிடிவாதம், கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு
தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கங்கத்தை அமைக்கும் முயற்சியில், பிரதமர் ஒருவரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பெயர் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் எனவும், மாற்று தெரிவுகள் இருக்காது எனவும் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும் மஹிந்தவின் பெயரை மீண்டும் பரிந்துரைப்பதில் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து மாகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை துறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தேசிய இணக்கப்பாடு அரசாங்கம் குறித்து அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் யாரை அடுத்த பிரதமர் பதவிக்கு பரிந்துரைப்பது என்ற கேள்வியை கட்சி உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேறு எவரதும் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது எனவும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரையே பரிந்துரைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தின் போதும் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் என்ற வாக்குறுதியை கொடுத்தே மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார். எனவே மக்கள் ஆணைக்கு மாறாக செயற்பட முடியாது எனவும் பசில் தெரிவித்துள்ளார்.
பஷில் ராஜபக்ஷவின் கருத்துடன் ஒரு சிலர் உடன்பட்டுள்ள போதிலும் பிறிதொரு தரப்பினர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
“மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்க வேண்டும் என்ற குரலே அதிகமாக ஒலிக்கிறது. மீண்டும் அவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என நாம் பரிந்துரைக்கும் பட்சத்தில் மக்களின் கோபத்தை அது மேலும் அதிகரிக்க செய்யும் செயலாக அமைந்துவிடும். எனவே மாற்று தெரிவு குறித்து சிந்திக்க வேண்டும்“ என்ற கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எனினும் பசிலின் நிலைப்பாட்டில் இருந்து மாற்றுக் கருத்துக்களை அவர் முன்வைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment