எங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவரே, இன்று சவூதி அரேபியாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார்
நாட்டில் ஏற்பட்டிருப்பது அரசியல் பிரச்சினையல்ல, பொருளாதாரப் பிரச்சினைதான். இந்நெருக்கடியை தீர்க்க கட்சிசார் அரசியல் மனநிலை களை கைவிட வேண்டுமென சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அமைச்சுக் கடமைகளை பாரமெடுக்கும் நிகழ்வில் இன்று (24) உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில்,உரையாற்றிய அவர்,
நாட்டில் ஏற்பட்டுள்ளது அரசியல் பிரச்சினையல்ல. பொருளாதாரப் பிரச்சினையே. இது, எல்லோரையும் பாதிக்கும் பிரச்சினை. எனவே, சகலரதும் ஒத்துழைப்பு இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு தேவைப்படுகிறது.
இப்பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இந்த அரசாங்கம்தான் காரணமென்பதுமில்லை. கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் மற்றும் இயற்கை நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ளவைதான் இவை. ஈஸ்டர்தாக்குதல், அதன்பின்னரான கொரோனா தொற்றுக்களால் தொடர்ந்து நமது நாடு முடங்க நேரிட்டது. இந்தக் காலங்களில் சுற்றுலாத்துறை வீழ்ந்தது. வௌிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவதும் வெகுவாகக் குறைந்தது. உள்நாட்டு உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏற்றுமதிச்செலாவணி வருமானத்தை பாதித்தது. இவைகள்தான், இந்த நிதி நெருக்கடியை ஏற்படுத்தின. இதுபற்றி முறையாகச் சிந்தித்தால் மூன்று மாதங்களில் எரிபொருள் பிரச்சினையை தீர்க்கலாம்.
நான், சவூதி அரேபியாவிலுள்ள பெற்றோலியம் கனியவள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன். எங்கள் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவரே. இன்று சவூதி அரேபி யாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார். எனவே, இதுகுறித்த எனது நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கப்படும். முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட, இவ்வாறான பல சவால்களை வெற்றிகொள்ள முடிந்திருக்கிறது. ஊழல், இலஞ்சம் என்பன எனது அரசியலில் இல்லை. எனது அரசியல் எதிரிகளால் கூட இதை நிரூபிக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையால், அரசியலிலும் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.
கட்சிகளுக்கு அப்பால் சென்றுதான் இப்பிரச்சினைகளத் தீர்க்க முடியும். இதனால்தான், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குகிறேன். இந்த ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோர் என்னில் நம்பிக்கை வைத்தே இந்த அமைச்சுப்பதவியை வழங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் அமைச்சர் ஹாபிஸ்நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர்களான காதர்மஸ்தான், அலிசப்ரிரஹீம், முஷர்ரஹ்ப் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment