'கோட்டா - ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்' என்ற மாணவர் பேரணி மீது கண்ணீர்ப்புகை. நீர்த்தாரை பிரயோகம்
“கோட்டா-ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்” என்ற தொனிப்பொருளில் குறித்த பேரணி நெலும் பொக்குண அரங்கத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு, கோட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே பதற்ற நிலை ஏற்பட்டது.
பின்னர், லோட்டஸ் வீதியை அடைந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்டபோது, போராட்டக்கார்களைக் கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி மாவத்தை, யோர்க் வீதி, வங்கி மாவத்தை, கீழ் சத்தம் வீதி, முதலிகே மாவத்தை மற்றும் வைத்தியசாலை வீதி ஆகியவற்றுக்குள் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி நுழைவதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் திலின கமகே, இன்று (19) கட்டளையிட்டிருந்தார்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவோர் அரச நிறுவனத்திலோ, உத்தியோகபூர்வ இல்லத்திலோ நுழைந்து சேதம் விளைவிக்காமலும் அப்பகுதியில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்காமலும் வன்முறை அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் போராட்டத்தை நடத்த முடியும் என, நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment