பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டும், இல்லையேல் இராணுவ ஆட்சி வரக்கூடிய சாத்தியக்கூறு - விக்னேஸ்வரன்
தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் பொறுப்பேற்று அதில் தோல்வி கண்டால் தமது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்ற பயம் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ராஜபக்சக்கள் ஏற்படுத்திய இந்த அவல நிலைக்கு நாங்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என சிந்தனை எதிர்க்கட்சியினர் மத்தியில் எழலாம். ஆனால் பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டும், இல்லையேல் இலங்கையில் இராணுவ ஆட்சி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
ராஜபக்சக்களே தம்மைத் தப்பியோட வழிசெய்து கொண்டு தமக்கு அண்மித்த இராணுவத்தினர் கையில் அரசாங்கத்தைக் கொடுத்துவிட்டு செல்லக்கூடிய சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.
விரைவில் ஸ்திரமுடைய ஒரு ஜனநாயக அரசாங்கம் பதவி ஏற்காவிட்டால் இராணுவ ஆட்சி வருவது உறுதி. அத்துடன் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்துவதற்கு இடமளிக்காமல் முழுமையாக ஆட்சியைக் கைப்பறினால் என்ன என்ற எதிர்க்கட்சிகளின் சிந்தனையும் இதற்கு காரணம்.
ஆனால் ராஜபக்சக்களுக்கு எதிரான சக்திகளை ஒரு பொது விடயத்தின் அடிப்படையிழல் ஒன்று திரட்டி ஆட்சியை கவிழ்த்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தலைமைத்துவமும் பலமும் எதிர்க்கட்சியிடம் இருப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment