இம்தியாஸ் தூக்கப்பட்டது ஏன்..? ரணிலின் சூழ்ச்சியை சஜித் முறியடித்தாரா..??
- Anzir -
ஐக்கிய மக்கள் சக்தியின், பாராளுமன்ற குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக இம்தியாஸ் பார்கீர் மரிக்கார் ஏகமனதாக பிரேரிக்கப்பட்டிருந்தார்.
சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன், சுயாதீன உறுப்பினர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காருக்கு ஆதரவளிப்பார்கள் என நம்பப்பட்டது.
எனினும் நேற்று சனிக்கிழமை (14) ஜனாதிபதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து, பெண் வேட்பாளர் ஒருவர் பிரதி சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின், பிரதி சபாநாயகர் வேட்பாளர் இம்தியாஸ்தான் என அறிந்து கொண்ட ரணில், இம்தியாஸை எப்படியும் தோற்கடிக்க வேண்டுமெனத் திட்டமிட்டார்.
தனக்கெதிராக சஜித்தை தலைவராக உருவாக்கியமை, தனிக்கட்சி தொடங்குவதற்கு சஜித் பிரேமதாஸாவை தூண்டியமை ஆகியவற்றுக்கு இம்தியாஸ்தான் பிரதான காரணமென ரணில் நம்புகிறார். இதனால் தனது பரம எதிரி இம்தியாஸ்தான் எனக் கருதும் ரணில், பிரதி சபாநாயகர் தெரிவில் ஒரு பெண் வேட்பாளரிடம் இம்தியாஸ் தோற்க வேண்டுமென திட்டமிட்டார்.
எனவே பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டுமென பகிரங்க அறிவிப்புச் செய்தார்.
இந்நிலையில் ரணிலின் வழியிலேயே சென்று ரணிலுக்கு பதிலடி கொடுப்பதென தீர்மானித்த சஜித், நேற்று சனிக்கிழமை, 14 ஆம் திகதி இம்தியாஸை தொடர்புகொண்டு, நிலைமையை விளக்கியுள்ளார். எனக்கு பதவிகள் முக்கியமல்ல. கட்சியும், கட்சித் தீர்மானமுமே முக்கியமானது என சஜித்திடம் தெரிவித்துள்ளார் இம்தியாஸ்.
இதையடுத்தே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி சபாநாயகர் வேட்பாளராக, ரோஹினி கவிரத்ன தற்போது பெயரிடப்பட்டுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2 முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ கவிரத்னவின் மனைவியாவர், ஆசிரியையாகவும் பணியாற்றியவர்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆண்டின் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment