Header Ads



இலங்கையில் பரந்து விரியும் கறுப்புச் சந்தையும், அதன் வியாபாரிகளும்..!!


அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமல்ல அனைத்து விதமான பொருட்களுக்கும் இந்நாட்களில் இலங்கையில் பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக சமையல் எரிவாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், பால் மா, மருந்துப் பொருட்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கு நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் அதனால் ஏற்பட்ட பணவீக்கமுமே பிரதான காரணம் என பொருளாதார விற்பன்னர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆனால், அதற்கும் அப்பாற்பட்ட ஒரு மாயை கறுப்புச் சந்தையினால் (Black Market) இங்கே தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பொருட்கள் சந்தையில் இல்லை என்றாலும் அவற்றை கறுப்புச் சந்தையில் இரட்டிப்பு விலைகொடுத்து வாங்கலாம் என்பதே உண்மை நிலவரம்.

சித்திரைப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக லிட்ரோ நிறுவனம் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அறிவித்தது. அவர்கள் தெரிவித்ததைப் போல், 20 ஆம் திகதிக்கு பின்பு லிட்ரோவின் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இதுவரை நாடெங்கும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவிக்கொண்டேதான் இருக்கின்றது.

இவ்வாறான சூழலில் கடந்த வாரத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எகிறியது. 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயுவின் விலை 5,187 ரூபாவாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த அறிவிப்பு இரத்து செய்யப்பட்டது.  அதன் பின்பு ஓரிரு நாட்கள் கடந்து 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 4,860 ரூபா என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த விலைக்கு சமையல் எரிவாயுவை வாங்குவதும் குதிரைக் கொம்பாகியுள்ளது. மக்கள் கூட்டம் அலைமோதும் வரிசைகளில் பெரும் அவஸ்தையுடனேயே அதிகரிக்கப்பட்ட சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.

இத்தனைக்கும் 2,185 ரூபாவிற்கு இருந்த சமையல் எரிவாயுவே இவ்வாறு 4860 ரூபாவாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்தளவிற்கு விலை உயர்ந்தும் சந்தையில் சமையல் எரிவாயு இல்லை என்பது மக்களிடையே மென்மேலும் கோபத்தையும் வெறுப்பையுமே ஏற்படுத்தியுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, கறுப்புச் சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. 2.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு 1800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், அதன் நிர்ணய விலையோ 910 ரூபாதான். அதேபோன்று, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு கறுப்புச் சந்தையில் 7,500 ரூபா வரை விலை போகின்றது. இன்னும் நாளாக நாளாக அதன் விலை மேலும் உயரலாம்.

சமையல் எரிவாயுவில் மாத்திரம் கறுப்புச் சந்தை விளையாடவில்லை. பெட்ரோல், டீசல் குறிப்பாக மண்ணெண்ணெய் போன்றவற்றிலும் அதன் தாக்கம் உள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் நிர்ணய விலை 87 ரூபா. ஒரு லிட்டரில் 1 1/4 போத்தல் மண்ணெண்ணெய் கிடைக்கும். ஆனால், மண்ணெண்ணெய் ஒரு போத்தலே 160 ரூபாவிற்கு கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதே நிலைதான் பால் மாவிற்கும். இரட்டிப்பு விலையில் பால் மாவிலிருந்து அத்தனை பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கான பிரதான தளமாக கறுப்புச் சந்தை விளங்குகின்றது. இங்கு வயிற்றெரிச்சலுடன் பொருட்களை கொள்வனவு செய்தாலும் அதனை வௌியே காட்டிக்கொடுக்காமலே நுகர்வோர் இருக்கின்றார்கள். காட்டிக்கொடுத்துவிட்டு அதனால் அதிக விலைக்கேனும் தமக்கு கிடைக்கும் பொருளும் கிடைக்காமல் போய்விடும் என்பதே அவர்களின் அச்சம்.

எவ்வாறாயினும், கறுப்புச் சந்தையில் இரட்டிப்பு விலையில் மக்கள் கொள்ளையிடப்படுகின்றார்கள். இதனை கண்டுகொள்வார் யாருமில்லை. பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்கி சமையல் எரிவாயு, பெட்ரோல் உட்பட அனைத்தையும் சந்தையில் உரிய விலையில் தரத்துடன் வழங்கும் நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டிய அதிகாரிகளும் அவர்களை நிர்வகிக்க வேண்டிய அரசியல்வாதிகளும் அதிகாரத்தில் நீடிப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். இதனால் கறுப்புச் சந்தையும் அதன் வியாபாரிகளும் சுதந்திரமாக பரந்து விரிந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆர்.திருஷான்னோ

No comments

Powered by Blogger.