தற்போதைய நெருக்கடியில் இலங்கையின் அனைத்து வழிகளும் கைமீறி போய்விட்டது - விஜயதாஸ
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியல் ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதனை நான் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம். அந்த நேரத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்த விடயத்தினை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின்னர் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைய ஆரம்பித்தன.
காலம் கடந்து சென்ற போது, பொருளாதார நிலைமைகள் மேலும் மேலும் நெருக்கடியான கட்டத்தினை அடைந்தது. மறுபுறம் காலிமுகத்திடல் தொடர் போராட்டங்கள் உடப்பட பொதுமக்கள் வீதிக்கு இறங்கினார்கள். அந்தப்போராட்டங்கள் முழு வீச்சினை அடைந்து விட்டன.
இந்த நிலையில் கூட, 21 ஆவது திருத்தச்சட்டத்தினை தற்காலிக ஏற்பாடாக கொண்டுவருவதற்கான வரைவொன்றை தனிநபர் பிரேரணையாக நான் உள்ளிட்ட எமது அணியினர் சபாநாயகரிடத்தில் கையளித்துள்ளோம். இருப்பினும், அதுசம்பந்தமாக அரசாங்கம் எந்தவிதமான அக்கறையையும் கொண்டதாக தெரியவில்லை.
தற்சமயம் ஜனாதிபதி சர்வகட்சிகளின் பங்கேற்புடனான இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கு தயாராக உள்ளதாக கூறுகிறார். எனினும் எதிர்க்கட்சி இந்த செயற்றிட்டத்தில் இணைவதற்கு முயற்சிக்கவில்லை. ஆகவே இந்த முயற்சி வெற்றி அளிக்குமா என்று திடமாக நம்பிக்கை கொள்ள முடியாது.
இச்சந்தர்ப்பத்தில் சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய திராணியைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி சவால்களுக்கு முகங்கொடுக்காது, தனது அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
தற்போதைய நிலையில் நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகளும் அந்த மனோநிலையையே கொண்டிருக்கின்றன. இச்சூழ்நிலையில் இலங்கையின் நெருக்கடிகளுக்கு சுமூகமான தீர்வுகளைக் காணும் காலங்கடந்துவிட்டது. அனைத்து நிலைமைகளும் கைமீறிவிட்டன. இந்நிலையில் இறுதி தீர்மானம் கோட்டாபயவிடத்திலேயே உள்ளது.
நிறைவேற்று அதிகாரமுறை ஜனாதிபதியிடம் தான் இறுதி தீர்மானம் உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கப்போகின்றாரா? இல்லை புதிய பிரதமர் தலைமையில் அரசாங்கத்தினை அமைக்கப்போகின்றாரா? அல்லது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக தான் பதவிலிருந்து வெளியேறப் போகின்றாரா என்பதை அவர் தான் முடிவெடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இன்றைய இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மேலும் காலம் கடத்தப்படுமாயின், நிலைமை மேலும் மேலும் கையை மீறி செல்லும் என்பதுடன், நிலைமை உக்கிரமடையும். மக்கள் இப்போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவையில்லை என்ற மன நிலைக்கு வந்துவிட்டனர்.
காலத்தை இழுத்தடித்தால் மக்களின் அந்த மன நிலை மேலும் உறுதியாகும். நாட்டில் போராட்டங்கள் தீவிரத் தன்மை அடையும். பொருளாதாரம், மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தும் நீடித்து இலங்கையின் நிலை நினைத்தும் பார்க்க முடியாத கட்டத்திற்கு செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Post a Comment