Header Ads



இரகசிய ஒப்பந்தத்தின் மூலமே ரணில் பிரதமர் ஆகினார், சுயரூபமும் வெளிப்பட்டு விட்டது - பசிலின் முக்கிய நண்பர் தெரிவிப்பு


இரகசிய ஒப்பந்தத்தின் மூலமே இடைக்கால அரசாங்கத்தினை பிரதமர் ரணில் அமைத்துள்ளதாகவும்,  இந்த ஆட்சியை ஒரு மாத காலத்திற்கு கூட கொண்டு செல்ல முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

மேலும், பிரதி சபாநாயகர் விவகாரத்திலேயே உண்மையான ரணில் விக்ரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.  

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாகவே இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக அன்றி நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒருபோதும் செயற்படமாட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் கட்சி சாரா அரசாங்கத்தில் பங்கேற்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாங்கம் எவ்வாறு கட்சி சாராததாக அமையும்? அவ்வாறெனில் சகல துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டு அவர்களை உள்ளடக்கிய ஆட்சியொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரணில் விக்ரமசிங்க ஏனைய கட்சிகளிலுள்ள உறுப்பினர்களை இரகசியமாக அழைத்து திருட்டு அரசாங்கத்தையே அமைத்துள்ளார்.

அதன் காரணமாகவே அவருக்கு முன்னோக்கிச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இதுவரையில் ஒரு டொலரைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை.

பிரதி சபாநாயகர் விவகாரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ரோஹிணி கவிரத்னவை நாம் வேட்பாளராக நியமித்தோம்.

இறுதி நாள் வரை அவரை ஏகமனதாக தெரிவு செய்யும் தீர்மானமே காணப்பட்டது. எவ்வாறிருப்பினும் அன்றைய தினம் பசில் ராஜபக்ச பொதுஜன பெரமுனவினரை அழைத்து அஜித் ராஜபக்சவை  வேட்பாளராக்கி ரணிலின் கோரிக்கைக்கு முற்றுபுள்ளி வைத்து , அவரின் கொள்கையையும் கேள்விக்குறியாக்கினார்.

பெண் பிரதிநிதியை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று யோசனை முன்வைத்த ரணிலே அதற்கு முரணாக செயற்பட்டார். இதிலிருந்தே அவரது சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டது.

19 ஆவது திருத்தம் மீள நடைமுறைப்படுத்தப்பட்டால் இரட்டை பிரஜாவுரிமையுடையோரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகும். எனவே பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் தானாகவே நீங்கும். ஆனால் அவர் அதற்கு இடமளிக்கமாட்டார். இந்த விடயத்தில் ரணிலின் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? இவ்வாறான கொள்கை மாறுபாட்டுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தினால் இன்னும் ஒரு மாதம் கூட ஆட்சி செய்ய முடியாது.

பின்வாசல் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ரணில் விக்ரமசிங்க, அதே பின்வாசல் வழியாகவே பிரதமராகவும் ஆகியுள்ளார். இவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.  

ராஜித சேனாரத்னவும் பசில் ராஜபக்சவும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.