Header Ads



பிரதி சபாநாயகர் பதவிக்கு, மீண்டும் இம்தியாஸ் பிரேரிப்பு


- Anzir -

மூத்த அரசியல்வாதியும், ஐக்கிய மக்ள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், பாராளுமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு, மீண்டும் பிரேரிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் அக்கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை, 13 ஆம் திகதி இடம்பெற்ற போதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸா நேரடியாகவே, இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காரை பிரதி சபாநாயகராக முன்மொழிந்துள்ளார். இதனை ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மனோ கனேசன் ஆகியோர் வழிமொழிந்துள்ளனர்.

இதன்போது குறுக்கிட்டுள்ள தலதா அத்துக்கோரள, ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள ரஞ்சித் மத்தும பண்டார, சுதந்திரக் கட்சி பிரதி சபாநாயகர் பதவிக்கு வேறு ஒருவரை நிறுத்தப் போவதில்லை என எமக்கு அறிவித்துள்ளது. இம்தியாஸை பிரதி சபாநாயகர் பதவிக்கு நிறுத்தினால், அதனை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் என வாக்குறுதி வழங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்று இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காரை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமிக்கும் பொறுப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த ரஞ்சித் சியம்பளாபிட்டிய, அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்க்கது.

No comments

Powered by Blogger.