Header Ads



எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் - நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதை கட்டுப்படுத்த திட்டம்

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று (23) முதல் நோயாளர்களை அனுமதிப்பதை கட்டுப்படுத்த உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியசாலை ஊழியர்களின் வருகை மிகக்குறைந்த அளவில் உள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்ற போதிலும் அதற்கான முறையான வேலைத்திட்டம் இல்லை எனவும் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கி நோயாளர் பராமரிப்பு சேவையை பேண முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக இன்று(23) முதல் நோயாளர்களை வைத்தியசாலைக்கு அனுமதிப்பது மட்டுப்படுத்தப்பட வேண்டுமென உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக ஊழியர்களின் வருகை குறைவடைந்துள்ளதால், திங்கட்கிழமை (23) காலை 8.00 மணிக்குப் பின்னர் அவசர மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களைத் தவிர பொது நோயாளர்களை அனுமதிப்பதை கட்டுப்படுத்துமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர்


ஷெல்டன் பெரேரா,பிரதிகளுடன் கடிதமொன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் காலி மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வைத்தியசாலைப் பராமரிப்புச் சேவையை அவசர மற்றும் முன்னுரிமை சேவையாகக் கருதி வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வைத்தியசாலை ஊழியர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் வைத்தியசாலைப் பணிப்பாளர் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக வைத்தியசாலை ஊழியர்களின் வருகை குறைந்து வருவதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பராமரிப்பதற்கும் போதிய பணியாளர்கள் இல்லாத பிரச்சினை காணப்படுவதாக பணிப்பாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.