Header Ads



அதிபர் தண்டித்ததால் பாடசாலைக்கு தீ வைத்த மாணவர்கள்


பாணந்துறையில் பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும்  கணனி ஆய்வு கூடத்திற்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 12 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர் ஒருவர் அணிந்து வந்த கையுறை தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் தண்டனை வழங்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவர் மற்றுமொரு மாணவனுடன் இணைந்து அதிபரின் நாற்காலிக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் கணினி ஆய்வகத்தில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட கணினிகள், துணைக்கருவிகள், மின்விசிறிகள், ஏராளமான பாடப்புத்தகங்கள், அதிபரின் நாற்காலி மற்றும் பல கோப்பைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தின் போது பாடசாலை மூடப்பட்டிருந்ததுடன் தீ பரவுவதைக் கண்ட குடியிருப்புவாசிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இரு மாணவர்களும் அதிபரின் அறையில் இருந்த சாவியை எடுத்து ஏனைய வகுப்பறைகளை திறந்து உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாணந்துறை வடக்கு பொலிஸார் அப்பகுதியில் உள்ள வீதியின் இருபுறமும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரு மாணவர்கள் சைக்கிளில் சென்று சிறிது நேரத்தில் திரும்பி வருவது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். Twin

No comments

Powered by Blogger.