Header Ads



இலங்கையின் தேசிய மலர் ‘அல்லி மலர்’; 'நீல அல்லி' அல்ல!

‘அல்லி மலர்' (Water Lily Flower) இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று செய்தித்தாள் விளம்பரங்கள் ஊடாகவும் பொதுமக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

இது தொடர்பில் பாராளுமன்ற, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்) எச்.ஈ. ஜனகாந்த சில்வா விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளில் தேசிய மலர் தொடர்பில் பாடசாலை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை விழிப்புணர்வூட்டினாலும் அது போதியளவு இடம்பெறவில்லை என CoPA குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் 2015 ஜூன் மாதத்தில் அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய தேசிய மலர் 'அல்லி மலர்' என அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை விழிப்புணர்வூட்டுவதற்குப் போதியளவு பிரசாரத்தை வழங்குவதற்கு அமைச்சு தவறியுள்ளதாகவும், அதனால் தேசிய மலர் 'நீல அல்லி' (Blue Water Lily) என இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குழு கண்டறிந்துள்ளது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண இன்று (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் கோபா குழுவின் முதலாவது அறிக்கையில் இந்த விடயங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளன.

2021.08.04 முதல் 2021.11.19 வரையான காலப்பகுதியில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்ட 7 அரச நிறுவனங்கள் மற்றும் ஒரு விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.