சகல அரச செலவினங்களுக்கும் கடும் கட்டுப்பாடு - அமைச்சரவைக்கு அலி சப்ரி பிரேரணை
நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை எதிர் கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து அரச செலவினங்களையும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அரச நிதியை பொறுப்புடனும் சிக்கனமாகவும் செலவு செய்வதுடன் மக்களுக்கு முறையான மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர் எப்போதுமில்லாத வகையில் முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்கொள்ள நேர்ந்துள்ள நெருக்கடிகளுக்கு முகங் கொடுப்பதற்கு அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அரச செலவினங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் தொடர்பாடல் கொடுப்பனவை கட்டுப்படுத்தல், நீர் மற்றும் மின்சார செலவை கட்டுப்படுத்தல், கட்டிடங்கள் நிர்மாணம் மற்றும் வாடகைக்கு கொள்வனவு செய்வதை இடைநிறுத்தல், தேசிய நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் கல்வி சுற்றுலாக்களை நிறுத்துதல், அமைச்சரவை அனுமதியின்றி அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கொடுப்பனவுகளை நிறுத்துதல், புதிய நலன்புரி மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்காமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான மட்டுப்படுத்தல்கள் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு தாம் நிதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். மறு அறிவித்தல் வரை மேற்படி மட்டுப்படுத்தல்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சர் அமைச்சரவையின் அனுமதியைக் கோரியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment