Header Ads



69 வருடங்களின் பின் இன்று இடம்பெறும் பாரிய ஹர்த்தால் - பொலிஸார் எச்சரிக்கை


1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய ஹர்த்தாலுக்கு 69 வருடங்களின் பின்னர் இன்று நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய ஹர்த்தால் பிரச்சாரமும் வேலை நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு வலியுறுத்தும் நோக்கில் இந்த ஹர்த்தால் பிரச்சாரம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கு அரச, அரை அரச மற்றும் அனைத்து தொழிற்சங்க ஆதரவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் ரயில்கள் மற்றும் அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.

பல ரயில் தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இருந்து பொல்கஹவெல, ரம்புக்கனை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்குச் செல்லவிருந்த மூன்று ரயில்கள் நேற்றிரவு இரத்துச் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வழமையாக இயங்குவதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

2

ஹர்த்தாலில் ஈடுபடுமாறு மக்களை வற்புறுத்துபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பில் உறுதி செய்துள்ள பல்வேறு உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவிக்கும் மக்களின் உரிமையை பொலிசார் மதித்து நடப்பதாகவும், அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படப் போவதில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.

ஹர்த்தாலில் பங்கேற்குமாறு பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சில குழுக்கள் அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.