2000 தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலில் பங்கேற்க உள்ளன - வெள்ளிக்கிழமை முழு இலங்கையும் முடங்கலாம்
சுகாதாரம், போக்குவரத்து, ரயில், மின்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் உட்பட 2000 க்கும் மேற்பட்ட குழுக்கள் அடங்கிய சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலில் பங்கேற்க உள்ளன.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் (06) நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால ஹர்த்தாலை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.
இதேவேளை, தொடருந்து தொழிற்சங்கம் இன்று (05) நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று (5) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் பொதுப் போக்குவரத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்
வங்கித் துறையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரும் ஹர்த்தாலில் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து மத வழிபாட்டு தலங்களும் காலை 08.30 மணி முதல் 09.00 மணி வரை ஒலிபெருக்கி மூலம் பிரார்த்தனைகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஹர்த்தால் மற்றும் ஏனைய பொதுப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபடுவதையோ அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையோ தவிர்க்குமாறு தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அமைதியான முறையில் தொடருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment