'கோட்டாவே வீட்டுக்குப் போ, ராஜபக்ஷர்களே வீட்டுக்குப் போ' என்ற 2 கோஷங்கள் மட்டுமே நாட்டில் உள்ளது
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சரியான தீர்மானங்களை எடுத்தால் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பழைய அரசியலில் இருந்து விடுபட்டு புதிய பயணத்துக்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் இந்த நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் மாத்திரமன்றி அனைவரினதும் எதிர்காலம் இன்று தொலைந்து போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இப்போது இலங்கை அராஜகமாகியுள்ளதாகவும் அனைத்து இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், “கோட்டாவே வீட்டுக்குப் போ, ராஜபக்ஷர்களே வீட்டுக்குப் போ“ என்ற இரண்டு கோஷங்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவுக்கும் சகோதரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பாராளுமன்றத் தேர்தலிலும் வழங்கப்பட்ட ஆணையும் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெளிவான மொழியில், ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2024 வரை நீடிக்கும் உலகளாவிய உணவு நெருக்கடி இலங்கையையும் பாதிக்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடன் உறவுகளை மீள ஏற்படுத்துவதே தேசத்தின் முன்னுரிமை என்றார்.
Post a Comment