இலங்கை மக்களுக்கு ரூ 123 கோடி நிதி உதவி - தமிழக தளபதி மு.க. ஸ்டாலினுக்கு ரவூப் ஹக்கீம் புகழாரம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் 01.05.2022 அன்று தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் தளபதி நண்பர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் . குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை, குறிப்பாக அவர்கள் வசிப்பதற்கான குடியிருப்புகள் போன்ற செயல் திட்டங்களைச் சுட்டிக்காட்டலாம்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால் மா மற்றும் மருத்துவ உபகரணங்கள் என ரூ 123 கோடி மதிப்பில் பொருள்களை அனுப்புவது குறித்து 29.04.2022 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரு தனித் தீர்மானம் தாக்கல் செய்த தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றியுமுள்ளார்.
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
என்ற திருக்குறளுக்கு ஏற்ப அவர் உரிய நேரத்தில் உடனடியாக உதவி செய்வதற்கு முன் வந்துள்ளமை பாராட் டுக்குரியது.
"அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்கையில் தான் வயிறு நிரம்பப் புசிப்பவர் நம்மை சேர்ந்தவர் அல்லர்" என்ற நபி மொழிக்கு ஏற்ப அயல் நாட்டு மக்கள் துன்பப்படக்கூடாது என்ற வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இலங்கை தமிழர்கள் என்றல்லாது , இலங்கை மக்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.
தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் மக்களை பிரித்துப் பார்க்காமல் அனைவருக்கும் அவர் உதவிகள் செய்ய முன் வந்துள்ளது உலக அளவில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய உடன் இலங்கைக்கு அத்தியாவசிய பொருள்களை அனுப்ப உரிய அனுமதி வழங்க தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் உடனடியாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதி இருப்பதும் பாராட்டுகுரியதாகும்.
எடுத்த காரியங்களை விரைவில் செவ்வனே செய்து முடிப்பதில் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு நிகரி ல்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இலங்கை மக்கள் சார்பிலும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பிலும் தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment