பல வாகனங்களை மோதி, சிலரை காயப்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வேன் - பொலிஸாருடன் இணைந்து STF மடக்கிப் பிடிப்பு
- க. அகரன் -
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற சொகுசு வாகனம் வீதியால் பயணித்த முச்சக்கரவண்டிகளை பந்தாடிவிட்டு நிறுத்தாமல் சென்றமையால் பதட்டமான சூழல் ஏற்ப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
A9 வீதியில் யாழ்ப்பாண திசையில் இருந்து வேகமாக வந்த கயஸ்வாகனம் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர்களை மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றதுடன், வைத்தியசாலைக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வந்துகொண்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளையும் மோதித்தள்ளியது.
தொடர்ச்சியாக நிறுத்தாமல் சென்ற குறித்த வானின் சாரதி இலுப்பையடிப்பகுதியில் மேலும் ஒரு முச்சக்கர வண்டியினை மோதித்தள்ளியதுடன் நிறுத்தாமல் தப்பிச்சென்றார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகனத்தினை துரத்திச்சென்றனர்.
பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் வாகனத்தினை துரத்திச்சென்றனர்.
அதிவேகமாக சென்ற வாகனம் அனுராதபுரம் மாவட்டத்தின் கொறவப்பொத்தானை பகுதியில் வைத்து பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்தால் வவுனியா நகரப்பகுதியில் மாத்திரம் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வானின் சாரதி மதுபோதையில் இருந்தாரா அல்லது போதைப்பொருட்கள் எதனையும் கடத்திச்சென்றாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த வாகனம் கனகராயன்குளம் பகுதியில் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
Post a Comment