ஜனாதிபதி, அரசாங்கத்தை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் - அடுத்த சில நாட்களில் SLPP முக்கிய பதவிகளில் மாற்றம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும். கட்சியின் முக்கிய பொறுப்பினை ஏற்குமாறு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள அரசியல் ஸ்தீரமற்ற தன்மைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக்கொள்ளப்படும்.
அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி தற்காலிகமாகவே வெற்றி பெற்றுள்ளது. வெகுவிரையில் பதிலளிப்போம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அரசியல் நெருக்கடிக்கு தீர்வு கண்டவுடன் அரச தலைவர்களுடன் கலந்தாலோசித்து முக்கிய பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை கட்சியின் முக்கிய பொறுப்பினை ஏற்குமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளோம். அரச தலைவர்களின் தீர்மானத்தை தொடர்ந்து அவர் சாதகமான தீர்மானத்தை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
பொதுஜன பெரமுன செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இருந்து விலகியுள்ளமை பிரதான குறைபாடாக இனங்காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படும். ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.
தவறான சித்தரிப்புக்களே தற்போதைய எதிர்ப்பிற்கான காரணியாக அமைந்துள்ளது என்றார்.
Post a Comment