Header Ads



ஆட்டம் இழந்தார் இம்ரான்கான் - தனது Mp க்கள் செம்மறி ஆடுகள் போன்று பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு - புதிய பிரதமரை தெரிவுசெய்யும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு சென்றது


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில்  தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் புதிய பிரதமரை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இம்ரான் கான், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க பாகிஸ்தானின் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பொதுமக்கள் நாட்டை பாதுகாக்க, ஞாயிற்றுக்கிழமை வீதிகளுக்கு வந்து "இறக்குமதி செய்யப்படும் அரசாங்கத்திற்கு" எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு இம்ரான் கான் கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டு சக்திகள் தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகவும், அதை நிறைவேற்ற பாகிஸ்தானின் சட்டமியற்றுபவர்கள் (எம்பிக்கள்) செம்மறி ஆடுகளைப் போல பேரம் பேசி வருவதாகவும் பிரதமர் கான் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, தன்னை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் நாடாளுமன்ற நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பைத் தடுக்கும் வகையில் இம்ரான் கான் மேற்கொண்ட நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் நிராகரித்தது அரசியலமைப்புக்கு எதிரானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தேசிய அவையை மறுசீரமைக்க ஏதுவாக ஒரு கூட்டத்தை அழைக்கவும் சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியுற்றதால், அந்நாட்டின் பிரதமராக ஒருவரை எதிர்கட்சி தேர்வு செய்யலாம். அதன் மூலம் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை எதிர்கட்சியால் ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடியும், அந்த தேதிக்குள் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

No comments

Powered by Blogger.