Header Ads



தாழ்ந்து பறக்கும், சிங்கள இனவாதத்தின் கொடி


- எம்.எல்.எம். மன்சூர் -

2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ச ஈட்­டிய அமோக வெற்றி சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்ட மூன்­றா­வது சிங்­கள பௌத்த எழுச்சி என்றும், முன்­னெப்­பொ­ழுதும் இருந்­தி­ராத பேரெ­ழுச்சி என்றும் வர்­ணிக்­கப்­பட்­டது (முத­லா­வது, இரண்­டா­வது எழுச்­சிகள் முறையே 1956 இலும், 2010 இலும் இடம்­பெற்­றி­ருந்­தன).

இலங்கை இன்று எதிர்­கொண்டு வரும் பெரும் நெருக்­க­டிக்­கான விதைகள் அந்த வெற்­றியை அடுத்தே ஊன்­றப்­பட்­டன. குறிப்­பாக விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் சிங்­கள இன­வா­திகள், அத்­து­ர­லியே ரத்ன தேரர் போன்­ற­வர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் காவி உடைத் துற­வி­களின் ஒரு குழு­வினர், வியத்­மக அறிஞர் குழாம் மற்றும் சிங்­கள செய்தி ஊட­கங்கள் ஆகிய நான்கு தரப்­புக்கள் கட்­ட­மைத்த போலித் தேசி­ய­வாத பெரு­மி­த­வு­ணர்­வுடன் இணைந்த விதத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வெறி மற்றும் மத­வெறிப் பிரச்­சா­ரங்­களின் மறை­முக மற்றும் நேரடி விளை­வொன்­றா­கவே இன்­றைய நெருக்­கடி தோன்­றி­யி­ருக்­கின்­றது.

சிங்­கள – பௌத்த மக்­களின் நலன்­களை பேணு­வது எப்­படி என்ற விட­யத்தை இந்தத் தரப்­பினர் முற்­றிலும் பிழை­யாக புரிந்து கொண்­டதே இங்­குள்ள பிரச்­சினை. சிறு­பான்மை சமூ­கங்­களின் உரி­மை­களைப் பறிப்­பதன் மூலமும், அவர்­க­ளு­டைய மத உணர்­வு­களை புண்­ப­டுத்­து­வதன் மூலமும், பல ஆண்டு காலம் அச்­ச­மூகங்கள் அனு­ப­வித்து வந்­தி­ருக்கும் தனித்­து­வ­மான கலா­சார உரி­மை­களை மறுப்­பதன் மூலமும், பௌத்த மக்கள் எவரும் வாழாத முல்­லைத்­தீவு மற்றும் பால­முனை போன்ற இடங்­களில் புத்தர் சிலை­களைக் கொண்டு போய் வைப்­பதன் மூலமும், கிழக்­குக்­கான தொல்­லியல் செய­லணி என்ற போர்­வையில் தமிழ், முஸ்லிம் மக்­களின் காணி­களை அடா­வ­டித்­த­ன­மாக அப­க­ரிப்­பதன் மூலமும் சிங்­கள மக்­களின் நலன்­களை நிறை­வேற்றி வைக்க முடியும் என இவர்கள் தவ­றாகப் புரிந்து கொண்­டி­ருந்­தார்கள். அதன் ஊடாக அவர்கள் இலங்கைச் சமூ­கத்தை பெரும்­பான்மை – சிறு­பான்மை என இரு பிரி­வு­க­ளாக பிள­வு­ப­டுத்­தி­னார்கள்.

இந்த இன­வாதக் கோஷங்­களின் பேரோ­சையும், சிங்­கள பௌத்த பெர­ஹ­ராவின் மெய் சிலிர்க்க வைக்கும் காட்­சி­களும் சாதா­ரண சிங்­கள மக்­களின் காது­க­ளையும், கண்­க­ளையும் அடைக்கச் செய்­தி­ருந்­தன. இந்தக் களே­ப­ரத்தில் இலங்கைத் தீவு சர்­வ­தேச ரீதியில் படிப்­ப­டி­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­த­னையும், அது மிக வேக­மாக தனது நண்­பர்­களை இழந்து வரு­வ­த­னையும் எவ­ராலும் பார்க்க முடி­ய­வில்லை.

இந்த வெற்றுக் கூச்­சல்கள் இது­வ­ரையில் தமக்கு அழிவைத் தவிர வேறு எத­னையும் பெற்றுத் தர­வில்லை என்­ப­தனை சிங்­கள மக்கள் சற்றுத் தாம­த­மாக இப்­பொ­ழுது புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்தப் புரி­தலை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அவர்கள் செலுத்­தி­யி­ருக்கும் விலை தான் இன்­றைய இலங்­கையின் நெருக்­கடி.

சுதந்­தி­ரத்­திற்குப் பிற்­பட்ட வர­லாற்றில் முதல் தட­வை­யாக இன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் நிரா­க­ரிக்கும் விதத்­தி­லான ஒரு சிந்­தனை மாற்றம் பரந்த சிங்­கள சமூ­கத்தில் மெது­வாக, ஆனால் உறு­தி­யாக நிகழ்ந்து வரும்; ஒரு பின்­பு­லத்தில், இலங்­கையின் இன்­றைய நெருக்­க­டியை அல­சு­கி­றது இக்­கட்­டுரை.

ஏப்ரல் மாதம் சிங்­கள மக்­களை பொறுத்­த­வ­ரையில் குதூ­க­லமும், கொண்­டாட்­டங்­களும் நிறைந்த ஒரு மாதம். நெல் அறு­வ­டைக்கு பின்னர் சாதா­ரண மக்­களின் கைகளில் காசு புழங்கும் காலம். தமது பாரம்­ப­ரிய புத்­தாண்டு பண்­டி­கையை கொண்­டா­டு­வ­தற்கு அவர்கள் வித வித­மான உணவுப் பண்­டங்­க­ளையும், உடு துணி­க­ளையும், பரிசுப் பொருட்­க­ளையும், வீட்­டுக்குத் தேவை­யான தள­பாடச் சாமான்­க­ளையும் வாங்­கு­வது வரு­டாந்த வழமை. அந்தக் கொள்­மு­தல்­க­ளுக்­கென தமது ஆண்டு வரு­மா­னத்தில் சுமார் கால்­வாசிப் பகு­தியை இந்த மாதத்தில் அவர்கள் செல­வி­டு­வார்கள்.

ஆனால், இந்தத் தடவை எல்­லாமே தலைகீழ். கொண்­டாட்­டங்­களின் பூமி­யாக மாற வேண்­டிய சிங்­களப் பெரு­நிலம் கொந்­த­ளிப்­புக்­களின் பூமி­யாக மாறி­யி­ருக்­கின்­றது.

விலை­வா­சி­களில் பன்­ம­டங்­காக ஏற்­பட்­டி­ருக்கும் உயர்வு, அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் தட்­டுப்­பாடு என்­ப­வற்­றுடன் இணைந்த விதத்தில் பதுக்கல் வியா­பாரம் மற்றும் கறுப்புச் சந்தை என்­பன நாட்டில் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன. 1970 களின் பின்னர் பிறந்த தலை­மு­றை­யினர் தமது வாழ்­நாளில் முதல் தட­வை­யாக இத்­த­கை­ய­தொரு பொரு­ளா­தார நெருக்­க­டியைச் சந்­திக்­கி­றார்கள்.

இந்த நிலையில் மக்­களின் ஆவே­சமும், விரக்­தியும் தன்­னி­யல்­பாக வெளி­யேறிக் கொண்­டி­ருக்­கின்­றன. பொது­வாக சிங்­கள பேச்சு வழக்கில் பயன்­ப­டுத்­தப்­படும் இரு சொற்­களை அவர்கள் அதிகம் அதிகம் இப்­பொ­ழுது உச்­ச­ரித்து வரு­வதைப் பார்க்க முடி­கி­றது. ஒன்று ‘பரிப்­புவக் கேவா’ என்­பது (‘பருப்பு கணவா’ என்ற சிங்­களச் சொல் ‘நம்பி மோசம் போனோம்’ என்ற அர்த்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ‘நாங்­க­ளா­கவே தேடிக் கொண்ட கேடு’ என்றும் சொல்­லலாம்). அதே நேரத்தில், ராஜபக்ஷ அர­சாங்­கத்தை வசை­பா­டு­வ­தற்கு மட்­டு­மன்றி முன்­சொன்ன நான்கு தரப்­புக்­களை சபிப்­ப­தற்கும் அவர்கள் ‘கால­கண்ணி’ என்ற சொல்லை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள் (‘கால­கண்ணி’ என்ற சொல்­லுக்கு தமிழில் ‘படு பாவிகள்’ என்ற விதத்தில் பொருள் கொள்­ளலாம்).

இங்­குள்ள விசேஷம் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் ஏற்­க­னவே ‘தின்­றி­ருக்கும் பருப்பை’ இப்­பொ­ழுது சிங்­கள மக்கள் தின்­றி­ருக்­கி­றார்கள் என்­ப­துதான். அதா­வது, தேர்­தல்­களில் வாக்­கு­களை அள்ளிக் கொள்­வ­தற்­காக இன­வா­தத்தை தூண்டி, மக்­களை உசுப்­பேற்றி முன்­னெ­டுக்­கப்­படும் சந்­தர்ப்­ப­வாத அர­சியல் இறு­தியில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்கும் அழிவை மட்­டுமே எடுத்து வர முடியும் என்ற கசப்­பான பாடத்தை ஏற்­க­னவே தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் படித்­தி­ருக்­கின்­றார்கள். இப்­பொ­ழுது சிங்­க­ள­வர்­களின் முறை வந்­தி­ருக்­கின்­றது.


இன்று நாடெங்­கிலும் பர­வ­லாக இடம்­பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களின் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒரு சிறப்­பம்சம் அவை முழுக்க முழுக்க சிங்­கள மக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாகும். இன­வா­தி­களும், சிங்­கள ஊட­கங்­களும் உரு­வாக்­கிய சமூகப் பிளவின் (Ethnic Polarisation) ஒரு பிர­தி­ப­லிப்­பா­கவே இதனைப் பார்க்க முடி­கி­றது. இந்தப் பொரு­ளா­தார நெருக்­கடி இன மத பேத­மில்­லாமல் எல்­லோ­ரையும் மிகவும் மோச­மான விதத்தில் பாதித்­தி­ருந்த போதிலும், தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­க­ளிலோ அல்­லது பெருந்­தோட்டப் பிர­தே­சங்­க­ளிலோ குறிப்­பி­டத்­தக்க அள­வி­லான அரச எதிர்ப்பு செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தாகத் தெரி­ய­வில்லை.


‘இது அவர்கள் வலிந்து தேடிக்­கொண்ட ஒரு நெருக்­கடி. அதனால் அவர்­களே இதனை தீர்த்துக் கொள்­ளட்டும்’ என்ற விதத்­தி­லான ஒரு அலட்­சிய மனப்­பாங்கு சிறு­பான்மை மக்­க­ளுக்கு மத்­தியில் நிலவி வரு­வது போல் தெரி­கி­றது.


‘இந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளிலோ அல்­லது அரச எதிர்ப்பு செயற்­பா­டு­க­ளிலோ பங்­கேற்­பதை முஸ்­லிம்கள் முற்­றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற விதத்தில் ஒரு சில முஸ்லிம் அமைப்­புக்கள் விடுத்­தி­ருக்கும் வேண்­டுகோள் மற்­றொரு சுவா­ர­சியம். அத்­த­கைய ஒரு வேண்­டுகோள் தேசிய நீரோட்­டத்­தி­லி­ருந்து தம்மை அன்­னி­யப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்து வந்த போதிலும், இந்த அரச எதிர்ப்பு அலைகள் எந்த ஒரு நேரத்­திலும் தமக்கு எதி­ராக திருப்பி விடப்­பட முடியும் என்ற அச்சம் கார­ண­மாக முஸ்­லிம்கள் அப்­ப­டி­யான ஒரு அணு­கு­மு­றையை எடுத்­தி­ருக்க முடியும்.


சிங்­கள மக்­களின் எழுச்சி இடம்­பெற்­றி­ருப்­ப­தாக கூறப்­பட்ட ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஓர் எதி­ரியை உரு­வாக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருந்­தது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் முத­லா­வது சிங்­கள – பௌத்த எழுச்சி 1956 இல் ஏற்­பட்­டது. தமி­ழர்­களை இலக்கு வைத்து நிகழ்த்­தப்­பட்ட மிகக் கொடூ­ர­மான வன்­முறைச் சம்­ப­வங்­க­ள் ஊடாக அந்த எழுச்சி ‘தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­னது’ என்ற தோற்­றத்தை உரு­வாக்­கி­னார்கள் சிங்­கள இன­வா­திகள். யாழ்ப்­பா­ணத்தில் 1958 இல் வாகன இலக்கத் தக­டு­களில் தமிழ் ‘ஸ்ரீ’ எழுத்து பொறிக்­கப்­பட்ட பொழுது மீண்டும் ஒரு கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தி 1956 இன் அர­சியல் மாற்றம் சிங்­கள மொழியின் எழுச்­சியின் ஒரு குறி­யீடு என்­ப­தையும், அங்கு தமிழ்­மொ­ழிக்கு இட­மில்லை என்­ப­தையும் அவர்கள் எடுத்துக் காட்­டி­னார்கள்.


2010 இல் போர் முடிவை அடுத்து மகிந்த ராஜ­பக்ச ஜனா­தி­பதித் தேர்­தலில் ஈட்­டிய வெற்­றியை சிங்­கள – பௌத்த மக்­களின் இரண்­டா­வது எழுச்சி என்று சொன்­னார்கள் அவர்கள். அந்தச் சந்­தர்ப்­பத்­திலும் விடு­தலைப் புலிகள் இயக்கம் நேரடி எதி­ரி­யா­கவும், அவர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்த தமிழ்ச் சமூகம் மறை­முக எதி­ரி­யா­கவும் சித்­த­ரித்துக் காட்­டப்­பட்­டது.


2019 ஜனா­தி­பதித் தேர்தல் இந்தப் போக்கின் உச்ச கட்­ட­மாக இருந்­தது. கோத்­தா­பய ராஜ­பக்ச தரப்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட பிரச்­சா­ரங்­களில் ‘இஸ்­லா­மிய தீவி­ர­வாதம்’ சிங்­கள மக்­களின் நேரடி எதி­ரி­யா­கவும், இலங்கை முஸ்லிம் சமூகம் மறை­முக எதி­ரி­யா­கவும் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.


‘சிங்­கள மக்­களின் நலன்கள்’ என்ற தலைப்பு இலங்­கையில் 2010 இன் பின்­ன­ரேயே பகி­ரங்க உரை­யா­ட­லுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. எதனை பொது வெளியில் பேசு­வது, எதனை தனிப்­பட்ட உரை­யா­டல்­களின் போது பேசு­வது என்ற சூட்­சு­மத்தை அறிந்­தி­ராத ஒரு சில சிறு­பான்மை அர­சியல் கட்சித் தலை­வர்கள் தொடர்ந்து முன்­வைத்து வந்த ‘இலங்­கையில் சிறு­பான்மைச் சமூ­கங்­களின் ஆத­ரவு இல்­லாமல் எவரும் அரச தலை­வ­ராக வர முடி­யாது; யாரும் அர­சாங்கம் அமைக்க முடி­யாது’ என்ற வாதம் இறு­தியில் சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கே வினை­யாக வந்து முடிந்­தது. 2010 ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் அந்த வாதத்தை பொய்­யாக்­கின.


அந்த திருப்­பு­முனை நிகழ்வு 2010 இன் பின்னர் இலங்கை அர­சி­யலில் பெரும்­பான்மை – சிறு­பான்மை இயங்­கி­யலை வடி­வ­மைப்­பதில் பெரும் செல்­வாக்குச் செலுத்­தி­யது. மகிந்த ராஜ­பக்­சவின் சிங்­கள – பௌத்த அர­சியல் செயல்­திட்­டத்தை சித்­தாந்த ரீதியில் வடி­வ­மைத்துக் கொடுத்த நளின் டி சில்வா, குண­தாச அம­ர­சே­கர, கெவிந்து குமா­ர­துங்க போன்ற தேசி­ய­வா­திகள் சிங்­கள மக்­களின் இந்த எழுச்சித் தரு­ணத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச முழு­மை­யாக பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மென தொடர்ந்தும் பரப்­புரை செய்து வந்­தார்கள். ‘சிறு­பான்மை கட்­சிகள் இனி­மேலும் சிங்­கள மக்­களை பணயக் கைதி­க­ளாக எடுத்து, காரியம் சாதித்துக் கொள்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது’ என்ற கருத்தை வலி­யு­றுத்தும் விதத்தில் நளின் டி சில்வா தொடர்ந்து எழுதி வந்தார். அர­சியல் மேடை­களை பயன்­ப­டுத்தி அந்தக் கருத்தை சாதா­ரண சிங்­கள மக்கள் மத்­தியில் எடுத்துச் சென்­றார்கள் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில மற்றும் அத்­து­ர­லியே ரத்ன தேரர் போன்ற தரப்­பினர். அந்த எண்­ணத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்­வ­தற்கு பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்­களும் கணி­ச­மான ஒரு பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்­தார்கள் என்­ப­தனை இங்கு ஒரு மேல­திக தக­வ­லாக குறிப்­பிட வேண்டும்.


2010 – 2015 மகிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் இலங்­கையில் ஆட்­சிக்கு வந்த ஊழல்­களும், முறை­கே­டு­களும் மலிந்த ஒரு அர­சாங்­க­மாக இருந்து வந்த போதிலும், அதை சிங்­கள தேசி­ய­வா­திகள் கண்டும் காணா­மலும் இருந்­தார்கள். அதற்கு அவர்கள் வெளியில் சொல்­லாத காரணம் ‘அப்­ப­டி­யான கடு­மை­யான ஒரு விமர்­சனம் சிங்­கள – பௌத்த அர­சியல் செயல்­திட்­டத்தை பல­வீ­னப்­ப­டுத்த முடியும்’ என்­பது.

‘ஒரு மாபெரும் நீரோட்டம் சேற்­றையும், சக­தி­யையும் அள்ளிச் செல்­வது சகஜம்’ என்று சொல்லி, அதனை எளிதில் கடந்து சென்றார் நளின் டி சில்வா. ஆனால், இன்­றைய நெருக்­க­டியை அப்­படிக் கடந்து செல்ல முடி­யாது என்­ப­தனை அவர்கள் நன்கு அறிந்­துள்­ளார்கள்.


சிங்­கள மக்­களின் ஆவே­சத்தைப் பார்த்து இன­வா­தி­களும், தேசிய வாதி­களும் கதி கலங்கி நிற்­கி­றார்கள். தமது குற்ற உணர்ச்­சியை மறைத்துக் கொள்­வ­தற்­காக எதிர்க் கட்­சி­யுடன் சேர்ந்து இவர்­களும் ராஜ­பக்­ச­களை வசை பாடிக்­கொண்டு இருக்­கி­றார்கள். ஆனால், இன்­றைய இலங்­கையின் நெருக்­க­டியை தீவி­ரப்­ப­டுத்­திய பல பிழை­யான முடி­வு­களை எடுப்­ப­தற்கு ஜனா­தி­ப­தியை தூண்­டி­ய­வர்கள், அவர் மீது அழுத்தம் பிர­யோ­கித்­த­வர்கள் இதே ஆட்கள் தான்.


கோத்­தா­பய ராஜ­பக்­சவின் சிங்­கள – பௌத்த அரசு எந்­த­தெந்தக் காரி­யங்­களை செய்­யக்­கூ­டாது என்றும், ஒரு போதும் செய்ய மாட்­டாது என்றும் இவர்கள் உரத்துச் சொல்லி வந்­தார்­களோ, இப்­பொ­ழுது அந்தக் காரி­யங்கள் அனைத்­தையும் ஒவ்­வொன்­றாக செய்ய வேண்­டிய நிலைக்கு இலங்கை அரசு பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கி­றது. இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளிடம் மண்­டி­யிட வேண்­டிய துர்ப்­பாக்­கியம்; சர்­வ­தேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பன்­னாட்டு நிதி நிறு­வ­னங்­க­ளிடம் மன்­றாடி, உத­வி­களை யாசிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம்; சிங்­கள மக்­களின் பொதுப் புத்­தியில் ‘பிச்­சைக்­கார நாடு’ என்று முத்­திரை குத்­தப்­பட்­டி­ருக்கும் பங்­க­ளாதேஷின் கத­வு­களைத் தட்டி, கடன் கேட்டு நிற்கும் சிறுமை; மத்­திய கிழக்கு நாடு­க­ளு­ட­னான நட்­பு­ற­வு­களை புதுப்­பித்து, பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கென ராஜ­தந்­திர ரீதி­யி­லான இர­க­சிய நகர்­வுகள்; ‘ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்தின் அடி­வ­ருடி’ என இவர்­களால் வர்­ணிக்­கப்­பட்டு வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு வெற்­றிலை வைத்து அழைத்து, பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­ழுப்­புவ­தற்கு யோசனை கேட்க வேண்­டிய அள­வுக்கு வாசல் வரையில் வந்­தி­ருக்கும் வெள்ளம்.


நாட்டை இந்த நிலைக்கு தள்ளி விடு­வ­தற்கு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் பங்­க­ளிப்புச் செய்த வீர­வன்ச – கம்­மன்­பில சோடி­யையும் உள்­ள­டக்­கிய பலர் இப்­பொ­ழுது திடீ­ரென நேரெதிர் திசையில் நின்று, ‘ராஜ­பக்­ச­ாக்களை ஒழித்துக் கட்­டுவோம்’ என தொண்டை கிழியக் கத்­து­வது தான் வர­லாற்றின் மாபெரும் முரண்­நகை.


சிங்­கள செய்தி ஊட­கங்­களைப் பற்றி சொல்­லவே வேண்டாம். சரிந்து வரும் ‘Ratings’ களை உயர்த்திக் கொள்ளும் ஒரே நோக்­கத்­திற்­காக ‘தெரண’ மற்றும் ‘ஹிரு’ போன்ற ஊட­கங்கள் ஒரு போலி அரச எதிர்ப்பு நாட­கத்தை அரங்­கேற்றி வரு­கின்­றன.


1987 ஏப்ரல் – மே காலப் பிரிவில் ஜே. ஆர். ஜய­வர்­தன ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசு எந்த அள­வுக்கு பல­வீ­ன­ம­டைந்­தி­ருந்­ததோ அதே அள­வுக்கு இப்­பொ­ழுதும் பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கி­றது. இதற்கு அப­ரி­மி­த­மான அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆட்சி முறையும் ஒரு காரணம். 1978 இல் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக முடி சூடிக்­கொண்ட ஜே ஆர் .ஜய­வர்­தன, ஓர் ஆணைப் பெண்­ணாக மாற்­று­வதைத் தவிர, தன்னால் எந்­த­வொரு காரி­யத்­தையும் செய்ய முடி­யு­மென ஆண­வத்­துடன் சொன்னார்.


1983 கல­வ­ரங்­களில் பல நூற்­றுக்­க­ணக்­கான தமி­ழர்கள் கொல்­லப்­படும் வரையில், கோடிக்­க­ணக்­கான ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் சூறை­யாடி அழிக்­கப்­படும் வரையில் வெறு­மனே வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்தார் அவர். யூலை 24 ஆந் திகதி மாலை பொரள்ளையில் தோன்­றிய கல­வரம், அதன் உச்ச கட்­டத்தை அடைந்­தி­ருந்த நிலையில் 28ஆம் திகதி அரச தொலைக்­காட்­சியில் தோன்றி எவ்­வி­த­மான குற்ற உணர்ச்­சியும் இல்­லாத தொனியில் இன­வா­தி­க­ளுக்கு மேலும் தூப­மிடும் விதத்தில் அவர் நிகழ்த்­திய உரை, இலங்கை ஜன­நா­ய­கத்தின் மீது படிந்த ஒரு பெரும் கறை. அந்த ஆண­வமே அடுத்து வந்த சில ஆண்­டு­களில் இலங்கை ஆசி­யாவின் மிகப் பெரும் கொலைக் கள­மாக மாறு­வ­தற்கு வழி­கோ­லி­யி­ருந்­தது.


1983 கல­வ­ரத்தை அடுத்து ஜே. ஆர். தூர­நோக்­கற்ற விதத்தில் ஜேவிபி இயக்­கத்தை தடை செய்­த­துடன் இணைந்த விதத்தில், அக்­கட்­சியின் தலை­வர்கள் மீண்டும் ஒரு முறை தலை­ம­றை­வா­கின்­றார்கள். அத­னை­ய­டுத்து 1987 – 1989 கால கட்­டத்தில் நாட்டில் ஓடிய இரத்த ஆறு வர­லாற்றின் மற்­றொரு ஆறாத வடு. அதற்கு வழி­கோ­லி­யவர் அதி­கார மம­தையில் தன்­னிச்­சை­யாக முடி­வு­களை எடுத்த ஜே. ஆர். ஜய­வர்­தன.


இலங்கை அரசு பல­வீ­ன­மாக இருந்த அந்தத் தரு­ணத்தை பயன்­ப­டுத்­திய ராஜீவ் காந்தி ஜே.ஆரை மிரட்டி, அடி­ப­ணிய வைத்தார். 1987 ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் திகதி இந்­திய விமா­னப்­ப­டையைச் சேர்ந்த ஐந்து விமா­னங்கள் இலங்­கையின் வான் பரப்பில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து, யாழ் தீப­கற்­பத்தில் 25 தொன் உணவுப் பொருட்­க­ளையும், மருந்துப் பொருட்­க­ளையும் வான்­வ­ழி­யாக வீசி எறிந்து, இலங்­கையின் இறை­மையை அவ­ம­தித்த பொழுது சர்வ வல்­லமை பொருந்­திய ஜே. ஆர். ஜய­வர்­தன அதனை வாய் மூடி பார்த்துக் கொண்­டி­ருந்தார்.


இன்­றைய இலங்கை மீண்டும் ஒரு தடவை 35 ஆண்­டுகள் பின்­நோக்கி 1987 க்கு சென்­றி­ருக்­கின்­றது. வர­லாற்­றி­லி­ருந்து பாடங்­களை படிக்­கா­த­வர்­களை வர­லாறு மீண்டும் மீண்டும் தண்­டித்துக் கொண்டே இருக்கும் என்ற கூற்றின் பிர­காரம், இலங்­கையை இப்­பொ­ழுது மீண்டும் ஒரு முறை இந்­தியா அடி­ப­ணிய வைத்­தி­ருக்­கின்­றது. அண்­மையில் அது இலங்­கைக்கு வழங்­கிய டொலர் கடன் தொகை மற்றும் வெளியில் சொல்­லப்­ப­டாத அது குறித்த நிபந்­த­னைகள் அனைத்தும் அதனைத் தெட்டத் தெளி­வாக எடுத்துக் காட்டும் சான்­றுகள்.


சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட இலங்கை வர­லாற்றில் பகுத்­த­றி­வுக்கு ஒவ்­வாத இத்­த­கைய காரி­யங்­க­ளுக்கு நிறைய உதா­ர­ணங்கள் உள்­ளன. ‘தமி­ழர்­களின் விடு­தலை’ என்றால் என்ன என்­ப­தனை விடு­தலைப் புலிகள் இயக்­கமும் இதே விதத்தில் தப்­பாக புரிந்து கொண்­டி­ருந்­தது. முஸ்லிம் மக்கள் பல நூறாண்டு காலம் வாழ்ந்து வந்த பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­க­ளி­லி­ருந்து அவர்­களை துரத்­தி­ய­டிப்­பதன் மூலமும், பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருக்கும் நூற்­றுக்­க­ணக்­கான மக்­களை கொன்று குவிப்­பதன் மூலமும், தென்­னி­லங்­கையில் கெப்­பித்­தி­கொல்­லா­வை­யிலும், புத்­த­ளை­யிலும் வறிய சிங்­கள மக்­களை இலக்கு வைத்து பேருந்­து­களில் குண்­டு­களை வெடிக்கச் செய்­வதன் மூலமும், இத்­த­கைய கொடூ­ரங்­களை துணி­வுடன் தட்டிக் கேட்க முன்­வந்த தமது இனத்­தையே சேர்ந்த புத்­தி­ஜீ­வி­க­ளையும், மித­வாத அர­சியல் தலை­வர்­க­ளையும் ‘போட்டுத் தள்­ளு­வதன்’ மூலமும்; தமி­ழர்­க­ளுக்கு விடு­த­லையை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென அவர்கள் நம்­பி­னார்கள். அந்த நம்­பிக்கை இறு­தியில் எந்த மாதி­ரி­யான அழி­வு­களை எடுத்து வந்­தி­ருந்­தது என்­ப­தனை நாங்கள் பார்த்தோம். தமிழ் அர­சி­ய­லையும், தமிழ் சமூ­கத்­தையும் 50 ஆண்­டுகள் பின்னால் கொண்டு சென்று வைத்து விட்டு 2009 இல் களத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னார்கள் அவர்கள்.


ஓர் அரச தலைவர் காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­டனும், வக்­கிர புத்­தி­யு­டனும் செயல்­பட்டால், தனது அதி­கா­ரங்­களை துஷ்பிர­யோகம் செய்தால் அது எத்­த­கைய விளை­வு­களை எடுத்து வர முடியும் என்ற கசப்­பான பாடத்தை கோட்­டா­பய ராஜ­பக்ச, ஜே.ஆர் ஜய­வர்­த­ன­வி­ட­மி­ருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு கண்­ணி­ய­மாக வெளி­யேறிச் செல்லக் கூடிய வாய்ப்பு (Diginified Exit) ஜே ஆருக்கு கிடைக்­க­வில்லை. இரத்த ஆறு ஓடும் ஒரு நாட்டை, பார்க்கும் இடங்­க­ளி­லெல்லாம் பிணக் குவி­யல்கள் தென்­படும் ஒரு நாட்டை 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ‘Legacy’ யாக அவர் விட்டுச் சென்றார்.


இந்த நெருக்­க­டி­யான தரு­ணத்தில் ஜனா­தி­பதி முத­லா­வ­தாக செய்ய வேண்­டிய காரியம் இந்த நெருக்­க­டியை திட­சங்­கற்­பத்­துடன் எதிர்­கொண்டு, கடந்து செல்­வ­தற்கு மக்­களை தயார்­ப­டுத்தும் பொருட்டு சிங்­கள – தமிழ் – முஸ்லிம் மக்கள் அனை­வரும் இலங்கைப் பிர­ஜைகள் என்ற முறையில் ஓர­ணியில் திரள வேண்டும் என்ற வேண்­டு­கோளை விடுப்­ப­தாகும். ஆனால், அவ­ருக்கு உரை­களை எழுதிக் கொடுக்கும் ஆலோ­ச­கர்கள் தேசிய ஒற்­றுமை, இன ஐக்­கியம், இலங்கை ஒரு பல்­லின, பல் கலா­சார நாடு போன்ற சொற்­களை இது­வ­ரையில் வேண்­டு­மென்றே தவிர்த்து வந்­துள்­ளார்கள்.


இரண்­டா­வ­தாக, அர­சாங்­கத்தின் ஒரு சில தரப்­புக்கள் மற்றும் அரச ஆத­ரவு செய்தி ஊட­கங்கள் என்­பன கடந்த இரண்­டரை ஆண்­டு­களில் முன்­வைத்து வந்­தி­ருக்கும் பகுத்­த­றி­வுக்கும், யதார்த்­தத்­திற்கும் கொஞ்­சமும் பொருந்­தாத பரப்­புரைச் செயற்­பா­டு­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும். இதுவரை காலமும் மிக மோசமான இனவாத / மதவாத பிரச்சாரங்களை மட்டற்ற விதத்தில் முன்னெடுத்து வந்திருக்கும் புத்த பிக்குகளையும் உள்ளடக்கிய அனைத்துப் தரப்புக்களுக்கும் ஒரு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்து வந்தாலும் சரி ‘சட்டம் அவர்கள் மீது பாயும்’ என்ற செய்தி தெளிவாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஆட்களை எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறு கையாள்வதற்கு உசிதமான ஒரு சூழல் நாட்டில் இப்பொழுது தோன்றியுள்ளது என்ற விடயம் இதற்கான ஒரு கூடுதல் அனுகூலம்.


சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் முதல் தட­வை­யாக சிங்­கள இன­வா­தி­களின் கொடி மட்­டு­மல்­லாமல் தமிழ் இன­வா­தி­களின் கொடியும், முஸ்லிம் இன­வா­தி­களின் கொடியும் ஒரே நேரத்தில் மிக மிக தாழ்ந்து பறக்கும் ஒரு யுக சந்­தியில் நாங்கள் நின்றிருக்கிறோம். அந்தக் கொடிகள் அவ்வண்ணம் மிக மிக தாழ்ந்து பறக்க வேண்டுமென்பதே எம் அனைவரினதும் பிரார்த்தனை. ராஜபக்சாக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்லும் சிங்கள இனவாதத்தின் கொடியை ஏந்திப் பிடிப்பதற்கு விமல் வீரவன்ச தரப்பையும் உள்ளிட்ட எவருக்கும் சிங்கள மக்கள் இனிமேலும் ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.


ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரித்து, ஒரே குரலில் பேசும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும். அதற்கு உசிதமான ஒரு சூழலை நாட்டில் உருவாக்குவது இன்றைய நிலையில் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய முதல் முன்னுரிமையாக உள்ளது. அந்த நிலையிலேயே ஓர் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பி, எமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நிம்மதியாக, சந்தோசமாக வாழக்கூடிய ஒரு நாட்டை எம்மால் அவர்களுக்கு விட்டுச் செல்ல முடியும்.

அந்த மாற்றத்திற்கான பயணத்தை சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து முன்னெடுப்பதற்கான வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்திருக்கிறது என்பதன் குறியீடே இன்றைய மக்கள் எழுச்சி.- Vidivelli

No comments

Powered by Blogger.