Header Ads



ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி, ஓமான் சுல்தானுக்கு மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள கடிதம்


எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓமானின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.  

கலாநிதி பந்துல குணவர்தன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட தூதுக்குழு ஓமான் சுல்தானகத்துக்கு 

 விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

இதன்போதே பந்துல குணவர்தன, தனது தூதுக்குழுவினருடன், ஓமான் எரிசக்தி மற்றும் கனியவள அமைச்சர் கலாநிதி மொஹமட் அல் ரூம்ஹியை சந்தித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடிதத்தை சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிக்கு கையளித்தார்.  

இதன்போது இலங்கை மற்றும் ஓமானுக்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிவாயு சேமிப்பு வசதிகளை அரச மட்டத்தில் நிறுவுவதில் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.  

பந்துலவின் இருதரப்பு வர்த்தக விஜயத்தை ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தலைமையிலான 17உறுப்பினர்களைக் கொண்ட ஓமான் வர்த்தகக் குழு கடந்த மார்ச் 05முதல் 09வரை இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் விளைவாக வர்த்தக அமைச்சர் குழுவின் விஜயம் மேற்கொள்ளப்பட்டது.  

இலங்கை அமைச்சர் மட்ட வர்த்தகக் குழு, ஓமான் சுல்தானகத்துக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், இலங்கை வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகேந்திர பெரேரா இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். சோமசேன மஹதுல்வேவா, சினெக் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகர், அட்மிரல் (ஓய்வு பெற்ற) திசர சமரசிங்க மற்றும் எஸ்.எல்.டி.சி.யின் இன் தலைவர் ரஞ்சித் ரூபசிங்க ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.  

அமைச்சர்களின் வர்த்தக பிரதிநிதிகள் குழு ஓமானின் பாரம்பரிய மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சேலம் பின் மொஹமட் அல் மஹ்ருகியை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆராய்ந்தனர். இரு நாடுகளிலும் சுற்றுலா நடத்துபவர்களுக்கு இடையே இணைப்புக்களை எளிதாக்குவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்த சந்திப்பின் போது, தூதர் அமீர் அஜ்வாத், இரு நாடுகளின் சுற்றுலா அமைச்சகங்களுக்கிடையே கையெழுத்திடுவதற்காக தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஊக்கியாக அமையுமெனக் குறிப்பிட்டார்.  

அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான இலங்கை அமைச்சர்களின் வர்த்தகக் குழு, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைக்கான துணைச் செயலாளர் கலாநிதி சலேஹ் ம்சான் தலைமையில் ஓமான் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் பிரதிநிதிகளுடன் விரிவான இருதரப்பு கலந்துரையாடலை நடத்தியது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு இரு நாடுகளிலும் உள்ள வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடங்குவதற்கான சாத்தியமான துறைகளையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.  

No comments

Powered by Blogger.