இது தேர்தலை நடத்தும் நேரமல்ல, நிலமை உக்கிரமடைந்தால் விற்பனை நிலையங்கள் மூடப்படலாம்
எமது பிரதான பிரச்சினை நாட்டினதும் வீட்டினதும் பொருளாதார நெருக்கடியாகும். மே மாதத்துடன் எரிபொருளுக்கான கடன் நிறைவடையவுள்ளது.
அதன் பின்னர் கடனைப் பெறுவது தொடர்பில் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்து விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும்.
எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மேலும் காலம் தாழ்த்த முடியாது. பாராளுமன்றத்தின் ஊடாக அந்த தீர்வினைக் காண வேண்டும்.
இது தேர்தலை நடத்துவதற்கான நேரமல்ல. எனவே நிதி அதிகாரத்தைப் பெற்று பாராளுமன்றம் அமைச்சரவையுடன் இணைந்து அதே போன்று இளம் தலைமைமுறையினருடன் இணைந்து செயற்படுவதற்கான வேலைத்திட்டங்கள் சிலவற்றை நான் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கின்றேன்.
அதற்கமைய நிதி அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கி , அதனை முகாமைத்துவம் செய்வதற்காக 6 தெரிவு குழுக்களை அமைக்குமாறும் பரிந்துரைத்தோம்.அதே போன்று 20 கண்காணிப்பு குழுக்களை நியமிக்குமாறும் யோசனை முன்வைத்தோம்.இதனுடன் வேலைத்திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவையில் செயற்படுவதற்கு கட்சி தலைவர்களின் தேசிய ஆணைக்குழுவொன்றையும் உள்ளடக்கியுள்ளோம்.
இந்த குழுக்களில் இளம் தலைமுறையினருக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அமைச்சரவை , கண்காணிப்பு குழுக்களின் தலைவர்கள், நிதி முகாமைத்துவ குழுக்களின் தலைவர்கள், கட்சி தலைவர்கள் சந்திப்பின் போதும் இளம் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும்.
இந்த இளம் தலைமுறையினரை தெரிவு செய்யும் பொறுப்பினையும் அவர்களுக்கே ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பில் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்க முடியும்.
இளம் குழுக்களின் நியமனங்கள் குறித்த நிலைப்பாடுகளையும் அவர்களிடமே பெற்றுக் கொள்ள வேண்டும். 'கோட்டா கோ கம' உள்ளிட்ட ஏனைய அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment