Header Ads



ஜனாதிபதியை பதவி விலகக் கோரும், மக்கள் போராட்டத்திற்கு ஒரு மாதம் பூர்த்தி


இன்று நாட்டில் வியாபித்துள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறு கோரும் எமது இளம் சந்ததியினர் புதிய தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்கான களமாக கோட்டாகோகம போராட்டக் களத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (30) ஒரு மாதமாகின்றது.

பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மக்கள் மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் இலத்திற்கு அருகே மார்ச் 31 ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் இன்றைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்று காலை முதல் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.

ரஜரட்ட , யாழ்ப்பாணம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் இன்று போராட்டக்களத்திற்கு வருகைதந்து ஆதரவு தெரிவித்தனர்.

இதேவேளை, மெய்வல்லுநர் வீரர்கள் சிலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடன் களுத்துறையிலிருந்து காலி முகத்திடலுக்கு வருகை தந்தனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து கலைஞர்கள் சிலர் கோட்டாகோகமவிற்கு வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கத்தை வெளியேறுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மைனாகோகம போராட்டத்தின் ஆறாவது நாள் இன்றாகும்.

கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள நடைபாதையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒருவர் ஆரம்பித்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாவும் முன்னெடுக்கப்படுகிறது.

உண்ணாவிரதம் மேற்கொண்டு வருபவரை சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல முயற்சிக்கப்பட்டபோதிலும் அவர் அதற்கு இணங்கவில்லை.

அதன் பின்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் அவருக்கு Saline வழங்குவதற்கு  நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் இருவர் குறித்த இடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்ததாக  செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நடைபாதையில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் தற்காலிக கூடாரமொன்றை அமைக்க முயற்சித்தபோது பொலிஸார் அதற்கு இடையூறு செய்தனர்.

No comments

Powered by Blogger.