Header Ads



நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் - வீரவன்சவின் சகா தெரிவிப்பு


அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை எனவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலுக்குச் செல்லும் நம்பிக்கையில் சில சக்திகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர எம்.பி  தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது நாட்டை மேலும் சீர்குலைக்கும் எனவும், நாட்டை சீர்குலைக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் உடன்பட போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க பிரேரணை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தது. சர்வஜன வாக்கெடுப்புக்கு செவிசாய்க்காவிட்டால் அரசியலமைப்பு ரீதியாக பிரச்சினைக்கு தீர்வுகாண தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இதன்படி, அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.  

இந்த நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள 41ஆளும் தரப்பு எம்.பிகளின் ஆதரவை பெற எதிரணி முயன்றுவரும் நிலையில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 11கட்சிகளின் கூட்டணி ஆதரவுவழங்க மறுத்துள்ளது. தமிழ் கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதாக அறிவித்துள்ள போதும் சு.க இதுவரை தீர்மானிக்கவில்லை என அறிவித்துள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு இடைக்கால அரசு அமைக்க ஜனாதிபதி எதிரணிக்கு அழைப்பு விடுத்தார். இதனை எதிரணி நிராகரித்துள்ளதோடு அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது.     

No comments

Powered by Blogger.