அடுத்த ஜனாதிபதி நான்தான், நாட்டிலுள்ள டொலர்கள் எல்லாம் ராஜபக்சக்கள் சட்டைப்பைக்குள் இருக்கின்றது - சஜித்
- சகா -
நாட்டில் டொலர்கள் இல்லை என்கிறார்கள் . ஆனால் நான் சொல்கிறேன் நாட்டிலுள்ள டொலர்கள் எல்லாம் ராஜபக்சக்கள் சட்டைப்பைக்குள் இருக்கின்றது .
திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். தொடர்ந்து பேசுகையில்..
நாட்டில் லஞ்சம் ஊழல் திருட்டு களவு அதிகரித்திருக்கின்றது. இன்று நாடு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. பொறுமை காத்த மக்கள் வீதிக்கு இறங்கி இருக்கின்றார்கள். எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டமும் கியூ வரிசையும். காலிமுகத்திடலில் இளைஞர்களும் யுவதிகளும் கடந்த பல நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எந்தவிதமான அரசியல் தலையீடு இன்றி அவர்கள் சுயமாக முன்வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
சுதந்திரமாக நாங்கள் வாழ வேண்டும் விஷம் போல் ஏறி உள்ள விலைவாசி குறைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
நிச்சயமாக எமது அரசாங்கம் அமையப் போகின்றது. நான் ஜனாதிபதியாக வருவேன். எமது அரசில் இப்பொழுது இலஞ்சம் ஊழல் கொள்ளையிலே சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அவர்களிடம் உள்ள அனைத்து டொலர்களையும் பறிமுதல் செய்து மக்களுக்காக நாங்கள் முதலீடு செய்ய இருக்கிறோம்.
காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் தங்களுக்காக அல்லது கட்சிக்காக அந்த ஆர்ப்பாட்டத்தை செய்யவில்லை. நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சம் மக்களுக்காக செய்கின்றார்கள்.
உண்மையிலே பாதுகாப்பு படையினர் பொலிஸார் மக்களுக்காக செயற்பட்டு வருகின்றார்கள். இந்த வகையிலே அரச கூலிப்படையினர் ஆர்ப்பாட்டத்தை நசுக்குவதற்கு முற்படுவதாக நாங்கள் அறிகிறோம் .
படையினர் அரசகூலிப்படை அல்ல. அவர்கள் யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். மக்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை படையினருக்கும் பொலிஸாருக்கும் இருக்கிறது என்றார்.
Jada kathawa
ReplyDelete