கோட்டாபயவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், சிலாபம் நகரில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. ஆதரவான குழுவினருக்கும் எதிரான குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. எனினும், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையை கட்டுப்படுத்திவிட்டனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவினரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியினரும் இன்னும் சில குழுவினரும் இணைந்து அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குழுவினர் நின்றிருந்த பக்கத்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றுவிட்டனர் என அறியமுடிகின்றது.
இந்த கல்வீச்சு தாக்குதல்களில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
Post a Comment