Header Ads



இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்


வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இலங்கைக்கு இல்லை எனவும்,  அது இடைநிறுத்தப்படும் எனவும் நிதியமைச்சு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.  

இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே  இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள் உருவாகியுள்ளது. 

நாம் கூறியதை அன்றே  கேட்டிருந்தால் இவ்வளவு பேரழிவு ஏற்பட்டிருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

எமது நாட்டு மக்களும் வர்த்தகர்களும் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். டொலர்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு நல்ல முடிவுதான். 

இதை முதலிலேயே நாம் எடுத்துக்கூறினோம். அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் தவறு அவ்வாறு,  பயணிக்க முடியாது என்றோம். எனவே சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று விவாதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். 

சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லும்போது சர்வதேச அளவில் நமக்குக் கிடைக்கும் நம்பிக்கையைப் பற்றி சிந்திக்கிறோம். அத்தகைய நம்பிக்கையை நாம் கட்டியெழுப்பியிருந்தால், நிதிச் சந்தைகளில் இருந்து கடன் வாங்க முடிந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்த நடவடிக்கைகளை முதலில் எடுத்திருந்தால் இவ்வாறு கடன்கள் நிறுத்தப்பட்டிருக்காது. 

பிரச்னை பெரிதானபோது, 'கடனை இப்போது கட்ட முடியாது, மக்கள் வரிசையில் நிற்காமல் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என்றோம். அதனையும் கேட்கவில்லை. 

இறுதியாக என்ன நடந்தது,  கடனை அடைக்க பணத்தை செலுத்தியதால் இறுதியாக  மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமையே ஏற்பட்டது.  முடிவில் என்ன நடந்தது? கடனை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. 

அப்போது சுமார் 5.5 பில்லியன் டொலர் அன்னிய கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். 

எவ்வாறாயினும், இலங்கையை இந்தப் பேரழிவிற்கு இழுத்துச் சென்றவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.