அமைதியான ஆர்ப்பாட்டகாரர்கள் மீது. இராணுவ பலத்தை பயன்படுத்தும் எந்த தயார் நிலைகளும் இல்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது முகநூல் பக்கத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடக மையம் பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டகாரர்கள் மீது இராணுவ பலத்தை தவறான முறையில் பயன்படுத்தும் எந்த தயார் நிலைகளும் இல்லை என அந்த அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த எந்த வகையிலும் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட மாட்டார்கள்.
வன்முறையான நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி பொலிஸார் உதவியை கோரும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் பொலிஸாருக்கு இராணுவத்தின் உதவி வழங்கப்படும் என கமல் குணரட்ன கூறியுள்ளார்.
அதேவளை அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு மத்தியில் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களை அனுப்பி, கலவரமான நிலைமையை ஏற்படுத்தவோ, குண்டு வெடிப்பு போன்ற ஒன்றை நிகழ்த்தி அதனை சுட்டிக்காட்டி, ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்க முப்படைகளை பயன்படுத்தும் முயற்சி இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை எனவும் கமல் குணரட்ன தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் அமைதியான மக்களின் போராட்டத்தை ஒடுக்க மோசடியான ஆட்சியாளர்கள் வழங்கும் அநீதியான உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் போது ஆயிரம் முறை யோசித்து செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியிருந்தார்.
Post a Comment