சாரா ஜெஸ்மினை கண்டுபிடித்தால், ஈஸ்டர் தாக்குதலில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம் - ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜூன் மாஹின்கந்த
அமெரிக்காவில் இருக்கும் அவர், சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
நான் நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் இல்லை, காணாமல் போகவுமில்லை. நான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதானி அல்ல. சாரா ஜெஸ்மினை நேரில் கண்ட சாட்சியாளரிடம் இருந்து எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. இது என்னிடம் மாத்திரம் கூறிய சாட்சியமல்ல.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுவது பொய். யார் அந்த அறிக்கை அவரிடம் கொடுத்தார்கள் என்பது எனக்கு தெரியாது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் சாய்ந்த மருது பிரதேசத்தில் நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நான் நடத்தினேன். சஹ்ரானின் மனைவி ஹாதியா, மகள் மற்றும் வேறு ஒரு பெண் இருந்ததாக கூறப்பட்டது.
விசாரணைகளை நடத்தும் போது இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சாரா ஜெஸ்மினை நேரில் கண்டதாக கூறப்படும் சாட்சியாளர் தொடர்பான தகவல் எனக்கு கிடைத்தது. இது குறித்து நான் எனது உயர் அதிகாரிகள் மற்றும் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவித்தேன்.
அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய நான் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட சாட்சியாளரான நபரை நான் தேடி கண்டுபிடித்தேன். அவரிடம் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலங்களை பதிவு செய்தேன். அந்த நபர் வழங்கிய தகவல்கள் உண்மையானதாக இருக்கும் என நான் உணர்ந்தேன்.
இதனையடுத்து மீண்டும் எனது உயர் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தினேன். இதனையடுத்து பொலிஸ் மா அதிபர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை என்னிடம் அனுப்பினார். நான் என்னிடம் இருந்த தகவல்களை அவர்களிடம் கூறினேன்.
அவர்கள் திருப்தியடையவில்லை என்பதால், என்னிடம் இருந்து சாட்சியாளரை அவர்களிடம் ஒப்படைத்தேன். அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பான நான் எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை. நான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணை அதிகாரியாக இருப்பதால் அதனை செய்ய முடியவில்லை.
ஒரு குழு விசாரிக்கும் போது நாங்கள் அதில் தலையிடுவதில்லை. சாய்ந்த மருது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சாரா ஜெஸ்மினை நேரில் கண்ட சாட்சியாளரையே நான் ஒப்படைத்தேன்.
சாரா ஜெஸ்மினை பார்த்ததாகவும் அவர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் வாகனத்தில் ஏறியதாகவும் அந்த வாகனத்தில் அபுபக்கர் என்ற பொலிஸ் அதிகாரி இருந்தார் என்றும் சாட்சியாளர் கூறினார்.
சாரா இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்றார் என்ற கதையை அவர் எனக்கு கூறவில்லை. இப்படியான கதையை எவரும் கூறவும் இல்லை நானும் கூறியதில்லை. இந்தியாவுக்கு சென்றிருக்கலாம் என நம்புவதாகவே அந்த சாட்சியாளர் கூறினார்.
இந்த சாட்சியாளர் என்னிடம் மாத்திரம் சாட்சியமளிக்கவில்லை. குற்றவியல் விசாரணை திணைக்களம், ஜனாதிபதி ஆணைக்குழு, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவற்றிடமும் சாட்சியமளித்தார்.
சாரா ஜெஸ்மீனை இந்த சாட்சியாளர் சிறிய வயது முதல் அறிந்தவர். புலஸ்தினி மகேந்திரன், தமிழ் பெண்ணே முஸ்லிமாக மதம் மாறியுள்ளார். பொய் சாட்சியங்களை சோடித்து பொலிஸ் அதிகாரியை நான் கைது செய்ததாக கூறுகின்றனர்.
அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை. சாய்ந்த மருது பிரதேசத்தில் உயிரிழந்த 18 பேர் தொடர்பான மரபணு பரிசோதனையில் அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சாராவின் தாயராது மரபணுவை கொண்டு பரிசோதனை நடத்திய போது, இறந்தவர்களில் சாரா ஜெஸ்மின் இருக்கவில்லை என்பது உறுதியானது.
இதனால், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையன குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, குற்றத்தை என் மீது சுமத்தி தப்பிக்க பார்க்கின்றனர்.
அத்துடன் சாரா ஜெஸ்மின் கொல்லப்படவில்லை. அது சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகள் சந்தேகத்திற்குரியவை. சாரா ஜெஸ்மீனை தேடும் தேவை இவர்களுக்கு இல்லை. அந்த பெண் இறந்து விட்டார் எனக் கூறினால், கதை முடிந்து விடும், பலர் தப்பிக்க முடியும்.
இது என் ஆத்ம கௌரவத்திற்கு பெரிய கரும்புள்ளி. 19 இருந்தனர் என்பதற்கான தெளிவான சாட்சியங்கள் உள்ளன. 16 பேர் இறந்துள்ளனர். இரண்டு பேர் இருக்கின்றனர். ஒருவர் இல்லை. அது யார்?. சாரா ஜெஸ்மின் உயிருடன் இருக்கின்றார். அவரை கண்டுபிடிக்காது ஏனையவற்றை தேடி பயனில்லை.
சரியான முறையில் விசாரணைகளை நடத்தினால், ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். இது ஒரு சதித்திட்டம். என்னால், வேறு எதனை சிந்திக்க முடியவில்லை எனஅர்ஜூன் மாஹின்கந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment