Header Ads



இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முஸ்தீபா...?


(அஸ்லம் எஸ்.மௌலானா)

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, உயிரிழப்பு ஏற்படுத்தப்பட்ட சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வினால் வாழ்க்கைச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் திண்டாடும் மக்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதானது அவர்களது அடிப்படை உரிமையாகும். அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட இவ்வுரிமையை மறுதலித்து, ஆயுதம் கொண்டு அடக்க முற்படுவதானது மனித உரிமை மீறலாகும்.  

கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது  கம்பஹா, ரத்துபஸ்வல பகுதியில் குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய மக்கள் மீதும் இவ்வாறே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, பலரது உயிர்கள் காவுகொல்லப்பட்டிருந்தன.

உண்மையில், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, பிரச்சினைகளுக்கு அவசரமாக தீர்வு வழங்குவதே அரசின் மீதுள்ள கடமையாகும். ஆனால் இப்பொறுப்புடைமையை புறந்தள்ளி விட்டு, அதற்குப் பதிலாக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து, மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கியொடுக்க முற்படுவதானது நிலைமையை இன்னும் மோசமடையவே செய்யும்.

அன்று தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு, அவர்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு, அடக்கியொடுக்கப்பட்டதன் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்து, நாடு பாரிய யுத்தமொன்றை சந்திக்க நேரிட்டிருந்ததை ஆட்சியாளர்கள் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.

இன்று அனைத்து இனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் ஒன்றிணைந்து, பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட பிழையான தீர்மானங்களே நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் என்பதை அவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களை அடக்கியொடுக்க முற்படுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முஸ்தீபா என்கிற சந்தேகமும் எழுகிறது.

எவ்வாறாயினும் ரம்புகனை சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற முறையில் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, உயிரிழப்பு ஏற்படுத்தப்பட்ட விடயமானது கொலைக்குற்றமாதலால், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிகபட்ச நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்- என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.