Header Ads



இது பசி பற்றிய பிரச்சினயாகும், எல்லாவகையிலும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்திட முன்வாருங்கள் - அநுரகுமார


நாட்டின் பொதுமக்கள் மக்களை வதைக்கின்ற அரசாங்கத்திற்கு அடிமைப்பட்ட மக்களல்ல என்பதை நிரூபித்து அழிவுமிக்க செயற்பாடுகளுக்கு எதிராக  வீதியில் இறங்க வேண்டும்.  பிள்ளைகளின் உணவுவேளை பற்றிய பிரச்சினையை அடக்குமுறையால் நிறுத்திவிட இயலாது....

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திசாநாயக்க 

(2022.04.01 – ஊடக கலந்துரையாடல் – மக்கள் விடுதலை முன்னணி தலைமையகம்)

மிரிஹானையில் அமைந்துள்ள சனாதிபதியின் வீட்டுக்கருகில் நேற்று (31) இரவு பாரிய ஆர்ப்பாட்ட இயக்கமொன்று நடைபெற்றது. சனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தீவிரவாதக் குழுவொன்றின் செயலாகுமென சனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது. சனாதிபதிக்கோ அவரது அரசாங்கத்திற்கோ இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள  துன்பங்கள் மற்றும் வேதனைகள் தொடர்பில் எந்தவிதமான கரிசனையும் கிடையாதென்பதே அந்த அறிவித்தலால் சுட்டிக்காட்டப்படுகின்றது. கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்ட தாய்மார்கள், தொழிலுக்குச்சென்று வீடுகளை நோக்கி  வந்துகொண்டிருந்தவர்கள், பொதுப் பிரசைகள், வயோதிப தாய்மார்கள்,  தந்தைமார்கள் உள்ளிட்ட பெருந்தொகையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தார்கள். அவர்கள் அதிகாலை 2.00 – 3.00 மணிவரை தங்கியிருந்து சனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு நிர்ப்பந்தித்து எதிர்ப்பினைக் காட்டினார்கள்.  சாதாரண பிரசைகள் பொழுதுபோக்கிற்காக இவ்விதமாக வெகுண்டெழுவார்களா? இல்லை. மக்கள் எதிர்நோக்குகின்ற  துன்பங்கள் பற்றி இந்த அரசாங்கம் எந்தவிதமான கவனத்தையும் செலுத்தி செயலாற்றுவதில்லை என்பதாலாகும்.  

12 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாடசாலை பிள்ளைகளின் உடுப்புகளை இரவு 12.00 மணிக்கு அயன்பண்ணவேண்டி நேர்ந்துள்ளது. மீண்டும் அதிகாலை 3.00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. அதிக வெப்பநிலைகொண்ட பின்னணியின்கீழ் பிள்ளைகளுக்கு உறக்கம்வர மாட்டாது. காலை உணவு தயாரிக்க மின்சாரம் கிடையாது. கேஸ் கிடையாது, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவும் வேண்டும். இந்த துன்பங்கள் அரசாங்கத்திற்கு விளங்கமாட்டாதா? மக்கள் இவ்வளவு துன்பங்களை அடைந்திருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர், சனாதிபதி இருக்கின்ற வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை. பிரசைகளால் இந்த நிலைமையைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு லீற்றர் எரிபொருளின் விலை ரூபா 100.00 – 150.00  என்ற அதிக அளவினால் அதிகரிக்கப்பட்டது.  ஒரு கேஸ் சிலிண்டரின் விலை இருந்த விலையைவிட இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 200.00 வரை அதிகரித்துள்ளது. சாதாரண பிரசைக்கு அத்தியாவசியமான அனைத்துப் பொருட்களினதும் விலை இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரித்ததால் மக்கள் எதிர்நோக்கியுள்ள  பிரச்சினை பற்றி அரசாங்கம் கவனஞ் செலுத்துவது கிடையாது. அந்த கவனிப்பு கிடையாதென்பதால்தான் மக்கள் ஆர்ப்பாட்டச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறின்றி அரசாங்கம் கூறுகின்ற வகையிலான தீவிரவாத அமைப்புகள் காரணமாகவல்ல. 

இத்தகைய மக்கள் பிரதிபலிப்புகளுக்கு அரசாங்கத்தின் கவனம் எவ்வாறு செலுத்தப்பட்டிருந்தது? “ஊ” சத்தம் போடவந்தால் ஜாக்கிரதை என்று ஜோன்ஸ்ரன் பர்னாந்து அச்சுறுத்தல் விடுக்கிறார். மொட்டுக்கட்சியின் பொதுச்செயலாளர் எனக் கூறப்படுகின்ற ஆள் “தாக்க வந்தால் தாக்குவோம். அடித்தால் அடிப்போம்.” எனக் கூறியுள்ளார். நிதியமைச்சர் கூறுவதும் அதிகமாக  சிந்திக்க வேண்டாமென்றுதான்.  பிரசைகள் பல்வேறுவிதமாக அல்லற்பட்டுக் கொண்டிருக்கையில் ஊடகங்கள் கேள்விகேட்கையில் கொடுக்கப்படகின்ற பதில்கள் இவைதான். சனாதிபதி கூறுவதோ இந்தப் பிரச்சினை தான் உருவாக்கியதொன்றல்ல என்றுதான். இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் காட்டுகின்ற மிகவும் கொடூரமான, மனிதாபிமானமற்ற தீர்மானங்கள் மக்களின் இந்த பிரச்சினைகளில் தாக்கமேற்படுத்தி உள்ளன. இந்த நாட்டுப் பிரசைகள் ராஜபக்ஷமார்களின் கொத்தடிமைகள் அல்லவென்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.  இந்த நாட்டு மக்கள் ராஜபக்ஷமார்களை வழிபடுகின்ற அவர்களுக்கு அடிமைப்பட்ட பிரசைகள் என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்த்தான் இத்தகைய நெருக்கடி நிலவுகையில் தனிவேறான விமானங்களை வாடகைக்குப்பெற்று திருப்பதி வழிபாட்டுக்குச் செல்கிறார்கள்.  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த நெருக்கடிக் காலத்தில் மாலைதீவுக்குச்சென்று நீரில் குட்டிக்கரணம் அடிக்கிறார். இவ்வாறான நெருக்கடி நிலவுகையில்தான் அவர் துபாய் சென்று விமானங்களில் குட்டிக்கரணம் அடிக்கிறார். இவ்வாறான நெருக்கடி நிலவுகையில்தான் பிரதமர் இத்தாலிக்கு விஜயம் செய்கிறார். இவ்வாறான நெருக்கடி நிலவுகையில்தான் 6.9 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட நட்டஈட்டினை ஷசேந்திர ராஜபக்ஷ குப்பை பசளைக்காக  செலுத்துகிறார். அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு கொந்துராத்தில் இருந்தும் ஒவ்வொரு கொள்வனவில் இருந்தும் கோடிக்கணக்கில் திருடிக்கொண்டிருப்பதும் இத்தகைய தருணத்தில்தான். 

சனாதிபதி இருக்கின்ற வீட்டுக்கு லயிட் துண்டிப்பதில்லை. அயலிலுள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. பிரசைகளுக்கு நியாயமான கோபம் வரமாட்டாதா?  மக்களை வதைக்கின்ற இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பு தோன்றுவது நியாயமானதே. நாட்டின் பொதுமக்கள் மக்களை வதைக்கின்ற அரசாங்கத்தின் அடிமைகளல்ல என்பதை நிரூபித்து அழிவுமிக்க செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டும். ஆரப்பாட்டங்களைச் செய்யவேண்டும். ஒருசில ஆர்ப்பாட்டங்களுக்குள்ளே அரசாங்கத்திற்குத் தேவையானவற்றைச் செய்துகொள்வதற்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் பற்றிக் கவனஞ் செலுத்துதல் வேண்டும். ஆர்பாட்டத்தை வன்முறை வடிவம்கொண்ட நிலைமைக்கு மாற்றக்கொள்ள வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு நிலவுகின்றது.  அத்தகைய நிலைமையில்தான் கோட்டாபயவின் எதற்கும் தைலமாக அமைந்துள்ள  இராணுவ பொறியமைப்பனை ஈடுபடுத்த முடியும். நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது ஒருதெரக பொது ஆதனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் உள்ளே அனுப்பப்பட்ட குழுக்கள் மிகுந்த திட்டமிட்ட அடிப்படையில் இந்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்களா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. கைக்குழந்தைகளை ஏந்திய தாய்மார்கள், முதிய தாய்மார்கள், தந்தைமார்கள், பிள்ளை, மனைவி, கணவன் என்ற வகையில் முழுக்குடும்பமுமே ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடமாட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியும். பொதுப் பிரசைகளின்  அமைதிவழியான ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட குழுக்கள்    ஈடுபடுத்தப்பட்டு  இத்தகைய நிலைமை உருவாக்கப்பட்டதா  எனும் நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. மக்களை வதைக்கின்ற அரசாங்கத்தை விரட்டியடிக்கும் ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட வன்முறைசார்ந்த நிலைமைகளைத் தடுத்துக்கொள்ள வேண்டியதும் பிரசைகளின் பொறுப்பாகும். இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இயலுமானவரை அமைதியாக, இயலுமானவரை ஒழுங்கமைந்தவகையில், இயலுமானவரை நெறிப்படுத்தலுக்கு கட்டுப்பட்டதாக  நிகழ்த்தப்பட வேண்டியுள்ளது. பொதுமக்கள் அது பற்றிக் கவனஞ் செலுத்துவார்களென நாங்கள் நம்புகிறோம்.  நாங்கள் அரசாங்கத்தின் கைகளில் ஆயுதங்களை கொடுத்திடக் கூடாது.

நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்ட பெருந்தொகையான பிரசைகள் தாக்கப்பட்டுள்ளார்கள். சாதாரண பொதுமக்களின் இத்தகைய அமைதிவழி ஆர்ப்பாட்டத்தின்மீது அத்தகைய வன்முறைசார்ந்த தாக்குதலை மேற்கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்தவர் யார்? பாதுகாப்பு அமைச்சர் போட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர உடனடியாக இந்த தாக்குலக்கான கட்டளைய பிறப்பித்தவர் யாரென்று  நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும்.   சனாதிபதிக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது  பொலிஸ் அமைச்சருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களை தாக்குவதற்காக அல்ல. பொதுக்களின் பாதுகாப்பிற்காகவே அவர்களுக்கு அந்த தத்துவங்கள் வழங்கப்பட்டுள்ளன.  சனாதிபதியும் பொலிஸ் அமைச்சரும் அந்த தத்துவங்களை பொதுமக்கள் மீது வன்முறைசார்ந்த தாக்குதல்களை மேற்கொள்வதற்காகவே பாவித்துள்ளார்கள். அது சம்பந்தமாக உடனடியாக விசாரணையொன்றை மேற்கொண்டு தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்குதல் வேண்டும். இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள்  பற்றிய, கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய  உத்தியோகபூர்வமான கூற்றினை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. இவர்கள் மேற்கொண்டிருப்பது ஆட்கடத்தலா எனும் சந்தேகம் எழுகின்றது. எமது தோழர் லாந்காந்தவும், தோழர் ஹந்துன்னெத்தியும் கைதுசெய்யப்பட்டவர்கள் பற்றிய விடயங்களை விசாரித்தறிய மிரிஹான பொலீசுக்குச் சென்றார்கள்.  கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்குதல் சம்பந்தமாக சட்டத்தரணிகள் குழு சம்டபந்தப்பட்ட செயற்பாடுகளில் இடையீடு செய்கின்றது. 

பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை முதன்மைப்படுத்திய  ஆர்ப்பாட்டத்திற்கு தாக்குதல் நடாத்தவும் பலவந்தமாக கைதுசெய்யவும் அரசாங்கத்திற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.  இந்த அரசாங்கத்தை நியமித்துக் கொண்டவர்கள் மக்கள் எனில்  தாம் நியமித்துக்கொண்ட அரசாங்கம்  அந்த மக்களுக்கு எதிராக செயலாற்றுமாயின் அதற்கெதிராக எழுச்சியடைவதற்கான நியாயமான உரிமை மக்களுக்கு உண்டு.  இது மாமன்னன் ஜோர்ஜ் ஆட்சிபுரிகின்ற நாடல்ல. மக்களால் நியமித்துக் கொள்ளப்பட்ட அரசாங்கமாகும்.   அந்த மக்கள் பற்றிய பொறுப்பினை  அந்த அரசாங்கம் ஏற்கமாட்டாதெனில் அதற்கெதிராக எழுச்சியடைவதற்கான நியாயமான உரிமை மக்களுக்கு உண்டு. நாங்கள் அந்த உரிமையைப் பாதுகாப்போம்.   அதைப்போலவே ஒரு கட்சி என்றவகையில் நாங்கள் எங்கள் பக்கத்தில் ஆற்றவேண்டிய  அனைத்துவிதமான பங்களிப்பினையும் நல்குவோம். பொலீசில் நீதிமன்றத்தில் இடையீடு செய்வதைப்போலவே மக்களை ஒழுங்கமைத்திடவும் ஒரு கட்சி என்றவகையில் நாங்கள் தயார்.  எனவே   மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைசார்ந்த நடவடிக்கையின் இறுதித்தருணமாக நேற்றைய இரவினை  மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும்  நாங்கள் கூறிக்கொள்கிறோம். மீண்டும் மீண்டும் தாக்குதல் நடாத்துவதை, கைது செய்வதை, செய்ய முயற்சித்தால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அந்த அரசாங்கத்திற்கும் எதிராக மென்மேலும் மக்கள் அணிதிரள்வதை தடுக்கமுடியாது.

இது பசி பற்றிய பிரச்சினயாகும்.  தமது பிள்ளைகளின் உணவுவேளை பற்றிய பிரச்சினையாகும். அத்தகைய பிரச்சினைகளின்போது அடக்குமுறையைக் கட்டவிழத்து கட்டுப்படுத்த முயற்சி செய்யப்படுமாயின் கோட்டாபய  நூற்றாண்டுகளுக்கே சொந்தமானவர். இது அப்படிப்பட்ட யுகமல்ல. எனவே கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு எதிராக தம்மால் இயலுமான விதத்தில் எதிர்ப்பினை தெரிவியுங்கள். இயலுமான எல்லாவகையிலும் இந்த அரசாங்கத்தை விரட்டியத்திட  முன்வாருங்கள். அதைப்போலவே ஒழுங்கமைந்து பொறுப்புடையவர்களாக நடந்துகொள்க. அரசாங்கத்தின் தந்திரோபாயங்களுக்கு அகப்படாதிருக்கவும் ஆவனசெய்வோமென பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.