ஜனாதிபதியை வெளியேற்ற அமைக்கப்பட்ட 'கோட்டா கிராமம்' - பல வசதிகளுடன் அசத்தல் ஏற்பாடு (முழு விபரம்)
கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் இந்த போராட்டம் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று வரை ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது ஆட்சியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில், மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்காக காலி முகத்திடல் பகுதியில் ஒரு பகுதியை வழங்கியிருந்தது.
இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணி இன்று, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவோரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளது.
இந்த பகுதிக்கு ''கோட்டாகோகம" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
''கோட்டாகோகம" என்ற பெயரை தமிழ் மயப்படுத்தினால், 'கோட்டா போ கிராமம்" என அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது.
கோட்டாகோகம மாதிரி கிராமமொன்றே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக இந்த கிராமத்தில், அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
போராட்டத்திற்கு வருகைத் தருவோர் தங்கியிருப்பதற்கு கூடாரங்கள், 24 மணிநேர இலவச உணவு சேவை, 24 மணிநேர இலவச மருத்துவ சேவை, அவசர ஊர்திகள், நூலகம், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுணவுப் பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகளின் பெட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதிகள் என அனைத்து விதமான வசதிகளும் கோட்டாகோகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வருகைத் தந்துள்ள ஆயிரக்கணக்கானோர், தமது தேவைகளை இந்த பகுதியில் பூர்த்தி செய்துக்கொள்கின்றனர்.
அதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக இந்த பகுதியில் கையெழுத்து பெறும் நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆயிரக்கணக்கானோர் இந்த பகுதிக்கு வருகைத் தந்து கையெழுத்துக்களை இட்டு செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றும் நோக்கில், ஒரு கிராமமே அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
Post a Comment