பெற்றோல் தாராளமாக கையிருப்பில் உள்ளது - சேமிப்பதும், சட்டவிரோத விற்பனையும் குற்றம்
பெற்றோல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு பெற்றோல் கையிருப்பிலுள்ளது. பொது மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்முதல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதும் விற்பனை செய்வதும் குற்றமாகுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.
தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்முதல் செய்வதை தவிர்க்கும் வகையில் நேற்று முதல் எதிர்வரும் இரு நாட்களுக்கு பிளாஸ்டிக் கேன் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் கைத்தொழில்சாலை உரிமையாளர்கள் உரிய ஆவணப்படுத்தலுடன் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாமெனவும் குறிப்பிட்டார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விநியோகத்தில் காணப்பட்ட நெருக்கடி நிலைமைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. எரிபொருளுக்கான வரிசை தற்போது குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.கடந்த மூன்று மாதகாலத்தில் மாத்திரம் வழமைக்கு மாறாக முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 35 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. சாதாரன நாட்களில் 5,500 மெற்றிக்தொன் டீசல் விநியோகிக்க்கபடும் ஆனால் தற்போது நாளாந்தம் 7,500 மெற்றிக்தொனை விடவும் அதிகளவில் டீசல் விநியோகிக்கப்படுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் நிற்பவர்களில் பெரும்பாலானோர் பிளாஸ்டிக் கேன்கள்,பீப்பாய்கள் ஆகியவற்றில் எரிபொருளை நிரப்பிக்கொள்வதற்கு காத்திருக்கின்றனர்.
எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் நிலைமை தீவிரமடைந்ததை தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை பெரும்பாலான பகுதியில் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
சட்டவிரோதமான முறையில் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் குற்றமாகும்.நேற்று முன்தினம் 10 ஆயிரம் லீற்றர் டீசல் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இனி சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் ஆகவே தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்வதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மின்விநியோக தடை அமுல்படுத்தாத காரணத்தினாலும்,தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்காகவும் நேற்று முதல் எதிர்வரும் இரு நாட்களுக்கு கேன்கள் மற்றும் பீப்பாய் ஆகியவற்றில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்களில் ஈடுப்படுபவர்கள் உரிய ஆவணப்படுத்தலுடன் பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம். எரிபொருள் விநியோக நடவடிக்கை பிரதேச சபை ஊடாக கண்காணிக்கப்படுகிறது. பெற்றோல் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தேவையான அளவு பெற்றோல் கையிருப்பிலுள்ளது. வழமையான நாட்களை காட்டிலும் தற்போது நாளாந்தம் 7,000 ஆயிரத்திற்கும் அதிகமான மெற்றிக்தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய விலைக்கமைய ஒரு லீற்றர் டீசல் விநியோகத்தில் 110 ரூபா நட்டத்தையும், ஒரு லீற்றர் பெற்றோல் விநியோகத்தில் 52 ரூபா நட்டத்தையும் எதிர்க்கொள்கிறோம்.
தற்போதைய விலைக்கமைய கூட்டுத்தாபனம் நாளாந்தம் 800 மில்லியன் தொடக்கம் 1000 மில்லியன் நட்டத்தை எதிர்க்கொள்கிறது என்றார்.
Post a Comment