Header Ads



தமிழ் தரப்பிடம் ஒரு வருடம் ஆட்சியை தாருங்கள், நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம்


தமிழ் தரப்பிடம் ஒரு வருடம் நாட்டின் ஆட்சியை தாருங்கள். இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயகத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று (16) வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டக்காரர்களால் வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.  இதனை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும.  ஈழத்தை கொடுத்திருந்தால் அது பணத்தை தந்திருக்கும் என்று முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சொல்கிறார்.

அன்று இரத்தினபுரியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டபோது  விடுதலைப்புலிகள் சிங்களமக்களிற்கு உதவிகளை வழங்கியிருந்தனர். அந்த வரலாறை நாம் மறக்க முடியாது. எனவே அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற சிந்தனை ஓட்டத்தினை நாங்கள் இன்று செய்தாக வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் சிங்கள மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.  தமிழ்தரப்பிற்கு ஆட்சியினை ஒருவருடம் வழங்குங்கள் ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக் காட்டுகின்றோம்.  தமிழ்சிங்கள மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கும் படியாக எமது செயற்பாடு இருக்கும். அதை நாங்கள் எமது போராட்ட காலங்களில் நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.

ஆட்சியாளர்களை ஏற்றுக் கொள்ள வைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். வெறும் ஜனாதிபதி வீட்டே போ என்பதும், ராஜபக்ஸ குடும்பம் வீட்ட போ என்பதும் எங்களது கோரிக்கை அல்ல. ஏற்கனவே நாங்கள் இவர்களை நிராகரித்தவர்கள். எங்களது கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் தருகிறார்களோ, அவர்களுடன் இணைந்து பேரம் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.