Header Ads



இலங்கை வரலாற்றில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை, இன்றைய தினமே முன்னெடுக்கப்பட்டதாக அறிவிப்பு


 இலங்கையின் அண்மித்த வரலாற்றில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரும்  ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருந்தனர்.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனைத்து பிரதேசங்களிலும் பொதுப்போக்குவரத்து, பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அன்றாட செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், ரயில் சாரதிகள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டமையினால் இன்றைய தினம் ரயில் சேவையும் இடம்பெறவில்லை.

அநேகமான பிரதேசங்களில் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடவில்லை.

பாடசாலை போக்குவரத்து சேவையும் இன்று தடைப்பட்டது.

அதிகளவிலான ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்துவிட்டு பாடசாலைகளுக்கு செல்லவில்லை என்பதுடன், மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

கொழும்பு நகரில் அரச மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன், தனியார் பிரிவு ஊழியர்களும் தேசிய போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதுடன், சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்த 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று மருதானை தொழில்நுட்ப சந்தியிலிருந்து பேரணியை ஆரம்பித்தன.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments

Powered by Blogger.