Header Ads



ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு, தேசிய ஷூரா சபையின் பணிவான வேண்டுகோள்


தற்போது நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் சம்பந்தப்படுவோர் பின்வரும் விடயங்களை விளங்கி அதற்கேற்ப செயல்படும்படி தேசிய ஷூரா சபை பணிவாக வேண்டிக் கொள்கிறது:-

1. ‘நாம் அனைவரும் இலங்கையர்கள்; ஒரு தாய் நாட்டின் குடிமக்கள்’ என்ற வகையில் சக ஆர்ப்பாட்டக்காரர்களோடு, - அவர்களது மதம், இனம், பால், வயது, அறிவுத்தரம், கட்சி போன்ற வேறுபாடுகளை  பொருட்படுத்தாது- மிகவும் கண்ணியமாகவும், சகோதரத்துவ வாஞ்சையோடும், அடிப்படை மனித விழுமியங்களைப் பேணியும் நடந்து கொள்ள வேண்டும்.

2. பாதுகாப்புத் தரப்பினருடன் வாக்குவாதம் செய்வதோ, கைகலப்பில் ஈடுபடுவதோ,பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ கூடவே கூடாது. இவ்விடயத்தில் தேசத்திற்கான எமது கடப்பாட்டை நாம் மறந்து செயல்படலாகாது.

3. ஆர்ப்பாட்டம் என்றால் அங்கு கோஷங்கள் எழுப்பப்படுவது சகஜமாகும்.ஆனால், நாம் புனிதமான ரமழான் மாதத்தில் இருக்கிறோம் என்பதனால் நோன்பு நோற்றுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது எல்லை மீறி கூச்சலிடுவதையும், முறையற்று நடந்து கொள்வதையும், ஆபாசமான, கீழ்த்தரமான, அறிவுக்குப் பொருந்தாத வாசகங்களை உபயோகிப்பதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அப்படியான பதாதைகளையும் பயன்படுத்தலாகாது. இது போன்ற பேச்சுக்களும் நடவடிக்கைகளும் நோன்பை பாதிக்கும் என்பதோடு முஸ்லிம் சமூகம் பற்றிய பிற சமுதாயத்தவர்களது நல்லெண்ணத்திலும் களங்கத்தை ஏற்படுத்தும். 

الصِّيَامُ جُنَّةٌ، وإذَا كانَ يَوْمُ صَوْمِ أحَدِكُمْ فلا يَرْفُثْ ولَا يَصْخَبْ، فإنْ سَابَّهُ أحَدٌ أوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ: إنِّي امْرُؤٌ صَائِمٌ

أخرجه البخاري (1904) ومسلم (1151) واللفظ له

"நோன்பு (பாவங்களை விட்டும் தடுக்கும்) ஒரு கேடயமாகும்.உங்களில் ஒருவர் ஒரு தினத்தில் நோன்பு நோற்றுவிட்டால் அவர் ஆபாசமான பேச்சுக்கள் பேச வேண்டாம்; கூச்சலிட வேண்டாம். அவருக்கு எவராவது ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் நோன்பிருக்கும் ஒருவர் எனக் கூறட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி -1904, முஸ்லிம் -1151)

4. முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டக்கூடிய தொப்பி, தாடி, ஜுப்பா, அபாயா, ஹிஜாப் போன்றவற்றோடு ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்படுவோர் மிகக்கூடிய அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சிலவேளை முஸ்லிம்களுடைய இத்தகைய அடையாளங்களோடு சில விஷமிகளும் ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து முஸ்லிம்கள் பற்றிய பிழையான மனப்பதிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

5. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையிலான மோதல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கலாம்.  ‘முஸ்லிம்கள் தமது சுயலாபங்களை அடையப் பார்க்கிறார்கள். அதற்கு ஊடகமாக ஆர்ப்பாட்டங்களை பயன்படுத்துகிறார்கள்.முஸ்லிம் தீவிராவாதம் கால்பதிக்கப் பார்க்கிறது.பெரும்பான்மையினரே கவனமாக இருந்து கொள்ளுங்கள்’ போன்ற கருத்துக்களை அவர்கள் பரப்பக் கூடும் என்பதை நாம் ஆழமாக  கவனத்திற் கொள்ள வேண்டும்.

6. ‘நாம் இந்நாட்டில் ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்டவர்கள்’, ‘இந்த நாட்டில் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்’ போன்ற வாசகங்களை இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாது. முஸ்லிம்களை ஓரங்கட்ட வேண்டும் என்பதிலும் அவர்கள் தலைநிமிர்ந்து விடக்கூடாது  என்பதிலும் மிகக் கவனமாக இருக்கும் சில தீயசக்திகள் இவற்றைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்ட இலக்குகளை திசை திருப்பலாம். எனவே, முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களின் போது மக்களோடு மக்களாக இருக்க வேண்டுமே தவிர தம்மை தனித்துவமாக காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. தமது வாசகங்களில் கூட ‘நாம் இந்த நாட்டின் பிரஜைகள்’ ‘நாம் இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும்’ போன்ற வார்த்தைகள் தான் பயன்படுத்தப்பப்பட வேண்டும். அது தான் உண்மையும் கூட. முதலில் நாட்டைப் பாதுக்கவே நாம் முயற்சிக்க வேண்டும். தேசியப் பிரச்சினைகளின் போது எல்லா இனத்தவர்களுடனும் கூட்டாக இருந்து நாம் முயற்சிக்க வேண்டும். காரணம் தற்போதைய பொருளாதார,அரசியல் நெருக்கடிகளால் முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாம் என்பது முழு மனித இனத்துக்குமான அருளாகும்.

7. ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் இஃப்தாரை கூட்டாக இருந்து நிறைவேற்றுவதில் தவறு கிடையாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் இஃப்தாருக்கான உணவுப் பண்டங்களை பிற சமயத்தவர்களுடன் தாராளமாகப் பகிர்ந்து கொள்வது வரவேற்கத்தக்கது. இஃப்தார் செய்யும் இடத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும்.ஆனால், அங்கு ஒலிபெருக்கிகளில் பாங்கு சொல்வதோ ‘அல்லாஹு அக்பர்’ போன்ற அரபு வாசகங்களை முழங்குவதோ அல்லது ஜும்ஆ தொழுகையை கூட்டாக நடத்துவதோ எந்த வகையிலும் வரவேற்க முடியாது. இவை கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான சமய, கலாசார அடையாளங்கள் பொதுப் போராட்டங்களின் போது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். 

ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் ஊடாக மக்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முயற்சிக்க முடியும் என்ற வகையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாம் முஸ்லிம்கள் என்ற வகையிலும் ரமழான் மாதத்தில் இருக்கிறோம் என்ற வகையிலும் இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கி இருக்கிறது என்ற யதார்த்தத்தினாலும் ஒரு முஸ்லிமான தனி மனிதனது தவறு முழு முஸ்லிம் சமூகத்தினதும் தவறாக பார்க்க்கப்படலாம் என்பதாலும் எம்மில் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும்  எமது ஒவ்வொரு செயலையும் சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய ஷூரா சபை மிக வினயமாக வேண்டிக் கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நாட்டுக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலத்தை தந்தருள்வானாக! 

இந்த ரமலான் மாதத்தில் எமது அமல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக!! ஆமீன்!

இவ்வண்ணம்

தேசிய ஷூரா சபை  13.04.2022

1 comment:

  1. சம காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய பல விழிப்புணர்வு விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு தேசிய ஷூரா சபைக்கு நன்றிகள்.....

    ReplyDelete

Powered by Blogger.