இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் இஸ்லாத்தின் புனிதத் தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது - விகாராதிபதி அஸ்சஜீ தேரர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“நாட்டில் சமகாலத்தில் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிகவும் அவசியம். அவை தவிர்க்க முடியாதவை என்பது உணரப்பட்டுள்ளது.இப்தார் நிகழ்வுகளில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வதன் மூலம் இஸ்லாத்தின் புனிதத் தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது” என கிரேண்ட்பாஸ் இசிபதானராமய விகாராதிபதி அஸ்சஜீ தேரர் தெரிவித்தார்.
தர்மசிறி மன்றத்தின் தலைவரான அஸ்சஜீ தேரர் கடந்த வெள்ளிக்கிழமை இசிபதான ராமய விகாரையில் இப்தார் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அந்த இப்தார் நிகழ்வில் பெளத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அஸ்சஜீ தேரர் பல தசாப்த காலமாக இசிபதான ராமய விகாரையில் இனநல்லிணக்க நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்தார் நிகழ்வுக்கான அழைப்பிதழில் ‘முத்துக்களை விட ஒற்றுமை மதிப்பு மிக்கது’ என குறிப்பிட்டிருந்தமை வரவேற்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அஸ்சஜீ தேரர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் “ நாட்டு மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நியாயமானதே. இவ்வாறான நல்லவிடயங்களுக்கு நாமனைவரும் ஒன்றுபடவேண்டும்.
இசிபதான ராமய விகாரையில் நான் நல்லிணக்க மண்டபமொன்றினை நிர்மாணித்து வருகிறேன். இந்த நல்லிணக்க மண்டபம் விரைவில் பூர்த்தி செய்யப்படும். அடுத்த வருட இப்தார் நிகழ்வினை பாரிய அளவில் இம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யத்தீர்மானித்துள்ளேன். இந்த நல்லிணக்க மண்டபத்துக்கு எந்த மதத்தவர்களும் வர முடியும். தங்களது சமய கலாசார நிகழ்வுகளை இங்கு முன்னெடுக்க முடியும்.நான் அனைவரையும் இங்கு வரவேற்கிறேன்
இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு எமது நல்லுறவுக்கு முன்னுதாரணமாகும். இதுபோன்ற நிகழ்வுகள் நாடெங்கும் நடாத்தப்பட வேண்டும். இப்பகுதி முஸ்லிம்களுடன் எமக்கு புரிந்துணர்வு இருக்கிறது. தொடர்புகள் இருக்கின்றன. அத் தொடர்புகள் இப்தார் நிகழ்வினை நடத்துவதன் மூலம் மேலும் வலுவடையுமென நான் நம்புகிறேன் என்றார்.
நிகழ்வில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் பிரதி செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸிம், ஸம்ஸம் பவுண்டேசனின் கல்விப்பிரிவின் பணிப்பாளர் அம்ஹர் ஹக்கம் தீன் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், பெளத்த, கிறிஸ்தவ, இந்து மதத் தலைவர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli
Post a Comment