ஜனாதிபதி கோட்டாபய பதவியில் இருக்கும் போது, அமைக்கப்படும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது மற்றுமொரு கானல் நீர் மாத்திரமே
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எமது கட்சியில் இருக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க தயார். எனினும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பற்றி உறுதிப்பாட்டை வழங்க முடியாது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கிடைக்கும் வாக்குகள் பற்றியும் உறுதியான கருத்தை தெரிவிக்க முடியாது. பணத்திற்கும், பதவிக்கும், சிறப்புரிமைகளுக்கும் அணி மாறும் நிலைப்பாட்டில் மாறாது இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து உறுதிப்பாட்டை வழங்குவது முட்டாள்தனம்.
எனினும் தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி உள்ளது. இதனால், எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது உறுதி.
நம்பிக்கையில்லா தீ்ர்மானத்தின் மூலம் அரசாாங்கத்தை தோற்கடித்தாலும் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. ஜனாதிபதி எடுக்கும் முடிவு தொடர்பாகவும் நிச்சயமில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் போது, அமைக்கப்படும் சர்வக் கட்சி அரசாங்கமோ, இடைக்கால அரசாங்கமோ எந்த அரசாங்கமாக இருந்தாலும் அது மற்றுமொரு கானல் நீர் மாத்திரமே எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment