Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்றுடன் 3 ஆண்டுகள் - சகலவகை பயங்கரவாதத்தையும் எதிர்ப்போம்


கடந்த  2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

அதே நாளில், தெமட்டகொடையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் சிறிய அளவிலான வெடிவிபத்துகள் ஏற்பட்டதுடன், இந்த வெடிப்பு சம்பவங்களில் 269 பேர் கொல்லப்பட்டனர்.

45 வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாடு முழுவதும் அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதோடு, சமூக ஊடகங்களுக்கு அரசாங்கம் பூரண தடை விதித்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் 196 பேர் இன்னமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 81 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து, கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மூன்று வருட முழு நினைவு நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

இன்று கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தலைமையில் ஆராதனை நடைபெறவுள்ளது

No comments

Powered by Blogger.