காலிமுகத் திடல் மக்கள் போராட்டம், இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா...?
- கலாநிதி எம்.சி. ரஸ்மின் -
மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றது. மக்களின் ஏகோபித்த சுய எழுச்சியாக அமைந்த, வன்முறையற்ற இப்போராட்டம் புதிய ஒரு குடியுரிமைக் கலாசாரத்தை தோற்றுவித்துள்ளது. மேல்வர்க்க மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் வரை இவ்வாறான ஒன்று சாத்தியப்படவில்லை. பேராசிரியர் ஜயதேவ உயன்கொட குறிப்பிடுவது போன்று, இரண்டுவாரங்களாக இடம்பெறும் இப்போராட்டம் ‘மக்கள் வளாகம்’ஒன்றை தோற்றுவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளும் பொதுமக்களும் இனிமேல் இனவாதம் எடுபடாது என்ற ஒரு சுலோகத்தை முன்வைக்கின்றனர். இது ஒரு நல்ல சுலோகம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த அரசாங்கம் இனவாதம், சமயவாதம், பெரும்பான்மை சிறுபான்மை பாகுபாடு என்பனவற்றை முன்னிறுத்தி மக்களை துண்டாடிவிட்டதுஎன்றும் மக்கள் ஏமாந்து விட்டார்கள் என்றும் ஆத்திரத்துடன் பேசப்படுகின்றது.
இப்போது சமூகங்களை பிரித்தாளும் அரசாங்கத்தின் சூழ்ச்சி புரிந்துவிட்டது. முஸ்லிம் மக்கள் எமது உடன்பிறப்புகள் இந்த நாட்டில் அவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. அவர்களும் இந்நாட்டில் வாழும் சம உரிமை உள்ள பிரஜைகள் என்றெல்லாம் அதிகமான பெரும்பான்மையினர் பேசுவதையும் பரவலாகக் காணமுடிகின்றது.
உணவுப் பண்டங்கள் பரிமாறப்பட்டன. பிக்கு ஒருவருக்கு மழை படாமல் கவசங்களை தலைமேல் பிடித்து உபசாரம் செய்த முஸ்லிம் பெண்ணின் படம் சமூக வலைத்தளங்களில் சிலாகித்துப் பேசப்பட்டது. சகல இனங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து புகைப்படம் எடுத்து சமத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனை ஒரு புதிய மாற்றம் என்றே கருதுவதில் தவறில்லை.
என்னுடைய ஒரு மாணவரையும் சமத்துவத்தை வெளிப்படுத்தும் பலர் மத்தியில் ஒருவராகக் கண்டேன். அவர் சுமார் ஒருவருட காலம் வரை மக்கள் அரசாங்கச் செயற்பாடு ஒன்றில் என்னோடு கலந்து கொண்டு கடமையாற்றியவர். தென் மாகாணத்தைச் சேர்ந்தவர். ஒரு நல்ல கலைஞன். இளைஞர். நூற்றுக்கணக்கான இளம் சிங்கள மாணவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். முஸ்லிம் மக்கள் மீது தான் கொண்டிருந்த காழ்ப்புணர்வை நினைத்து பல சந்தர்ப்பங்களில் மனம் உருகினார். கண் கலங்கி அழுதும் உள்ளார். சக முஸ்லிம் இளைஞர் யுவதிகளைப் பார்த்து இவர்கள் என் உறவினர்கள் என்று மனம் வருந்திக் கூறியவர். மிகுந்த தலைமைத்துவ ஆளுமை கொண்டவர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முற்றுமுழுதாக மாறிவிட்டார். தேசாபிமானியாக மாறிய அவர் சமூகவலைத்தளங்களில் முஸ்லிம்களை எதிர்த்து எழுதினார்.
முஸ்லிம்கள் பெரும்பாலானவர்கள் இனவாதிகள் என எழுதினார். யார் மத்தியில் தனது தப்பான காழ்ப்புணர்வை நினைத்து மனம் வருந்தினாரோ அவர்கள் இருக்கின்ற சமூகவலைத்தளங்களிலேயே முஸ்லிம்களுக்கு எதிராகத் தேசாபிமானக் கவிதைகளை எழுதிக் கொட்டினார். ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லிம்கள் போராட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பை அதிகம் பாராட்டி இப்போது சமூகவலைத்தளங்களில் எழுதுபவர்களுள் இவர் முதன்மையானவர். இது ஒரு உதாரணம் மாத்திரமே. இதுபோன்று பல சம்பவங்களை பட்டியலிட்டுச் சொல்ல முடியும். இன்று சிலாகித்து எழுதும் பலர் ஒரு காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தை வலுப்படுத்த முஸ்லிம்களுக்கு எதிராக வலைத்தளங்களை பயன்படுத்தியவர்களே.எனவே இந்த மாற்றத்தை சுயவாசிப்பின்,தர்க்க ரீதியான பரிதலின், கற்றலின், உரையாடலின் பேறாக ஏற்பட்டது எனக் கொள்ள முடியாதுள்ளது.
சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் அதிகம் சிலாகித்துப் பேசப்படுவதாலும் நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இன, மத, பெரும்பான்மை சிறுபான்மை பேதங்களை எதிர்த்துப் பேசுவதாலும், இனிமேல் இனவாதம் மேல் கிழம்பாது – வலுவிழந்து விட்டது என்ற முடிவுக்கு வரமுடியுமா? இனவாதத்திற்கு இனிமேல் இடமில்லை எனக் கருதுவது யதார்த்தமானதா? அல்லது அதனை எவ்வாறு புரிந்து கொள்வது?
பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி கோட்டாவும் இனவாதத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என்ற பொது அபிப்பிராயம் பரவலாகப் பேசப்படுவதுண்டு. சிலர் இனவாதத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் சிங்கள மக்களை ஏமாற்றி, முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களைத் தூண்டிவிட்டு ஆட்சிபீடம் ஏறியது என அடித்துச்சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் எதுவும் பொய்யில்லை.
ஆனால், இலங்கை அரசியலை ஆட்டிப்படைக்கும் இனவாதம் பற்றி முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டிய முழுமையன உண்மை இது மட்டும் அல்ல.
அடிப்படையில், இனவாதம் என்பது சிங்கள முஸ்லிம் மக்களின் தெரிவல்ல. மாறாக, இலங்கை அரசியலை இயக்க வைக்கும் பிரதான உபாய சத்தியாகவே இனவாதம் காலந்தோறும் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை தேடிப் பார்ப்பது இங்கு அவசியப்படாது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டதை ஒரு பிரதான மைற்கல்லாகக் கொண்டால், அதனைத் தொடர்ந்து ஆட்சிபீடம் ஏறிய சகல அரசாங்கங்களும் இனவாதத்தை ஒரு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.
ராஜபக்ச அரசாங்கம் மாத்திரம் இனவாதம் கொண்டது, ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சஜித் தலைமையிலான கூட்டமைப்போ மிதவாத- நடுநிலைப போக்கு கொண்டது என்று எந்த வகையிலும் கருத முடியாது. இனவாதத்தை போசித்து வளர்ப்பவர்கள் இரண்டு முகாம்களிலும் நிறைந்துள்ளார்கள். சஜித், ராஜித, ஜெனரல் சரத்பொன்சேகா, சம்பிக்க போன்றவர்கள் பல்லின சமூக ஒற்றுமையை நேசிக்கும் திடமான அரசியல் தலைவர்கள் என்ற சான்றுப்பத்திரத்தை யாரும் வழங்க முடியாது. ராஜபக்ச குடும்பம் இனவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து அனுசரணை வழங்குகின்றது, ஆனால், ஏனையவர்கள் தேவை ஏற்படும் போது அதனை கையில் எடுக்கும் தகுதியுள்ளவர்களே.
இலங்கை அரசியலில் இனவாதம் என்பது பிரித்து வைக்க முடியாத ஒரு நியதி. யாரும் இதனைக் கையில் எடுக்க முடியும். யார் இதனைக் கையிலெடுத்தாலும் அது செயற்படும். யார் இதனைக் கையில் எடுத்தாலும் முஸ்லிம்கள் எல்லா வகையிலும் இதன் இலக்காக முடியும்.
அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இயங்கி வந்த இனவாத ஏஜண்டுகள் இன்னமும் இருக்கிறார்கள். பொது வெளியில் அதிகமானவர்கள் பேசும்போது அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். சமூக நல்லிணக்கத்தை எத்தனை இலட்சம் மக்கள் ஆதரித்து பேசினாலும் ஒரு சில இனவாத ஏஜண்டுகள் குறிப்பாக ஞானசார தேரர் போன்றவர்கள் மிக இலகுவாக அத்தகைய ஆதரவை நலிவடையச் செய்யும் ஆற்றல் கொண்டவர்கள்.
இப்போதைய நிலையில் இனவாதத்தின் கழுத்து நசுக்கப்பட்டிருந்தாலும் அதன் தீய சக்தியை ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. தேவையான போது இது மேல் கிளம்பும். இனவாதத்தை தூண்டி விடும் அதி சக்திவாய்ந்த ஊடகங்கள் ஒவ்வொரு நிமிடமும் தமக்கான வாய்ப்பு வரும்வரை காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே, இனவாதம் இனிமேல் ஏற்படாது என்று பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை.
சமய கிரியைகளை காட்சிப்படுத்தல்
போராட்டத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம்களின் வெளிப்பாடுகள் தொடர்பில் மிகவும் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை அசட்டை செய்யப்படமுடியாதவை. கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. எவ்வாறாயினும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம்கள் ஓர் ஊரில், ஒரு பாடசாலையில், ஒரே மத்ரசாவிலிருந்து வரும் ஒத்த தன்மையும் கொண்டவர்கள் அல்லர். இவர்கள் தன்மையில், அனுபவத்தில், அறிவில், வித்தியாசமுள்ளவர்கள். யாருடைய புத்திசாலித்துவமான, சமூக வரைவிலக்கணத்திலும் அகப்படாதவர்கள். இனவாதத்தின் அடக்கு முறையை வித்தியாசமாக அதேநேரம் தனித்தனியாக சந்தித்த அனுபவம் கொண்டவர்கள். குறிப்பாக இரண்டு பிரதான முஸ்லிம் அரசியல் அணியினாலும் ஏமாற்றப்பட்டவர்கள். முஸ்லிம் சமய, அரசியல் பிரதான பீடங்களின் சுயநலத்தால், இயலாமையால், போதாமையால் சிதறிப் போனவர்கள்.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் நீதி வேண்டித் தவித்தபோது முஸ்லிம்களின் பெயரால் இயங்குகின்ற எந்தவொரு கட்சியாலும், இயக்கத்தாலும் நியாயம் பெற்றுக்கொள்ளாதவர்கள். தமது குடியுரிமையை சுதந்திரமாக வெளிப்படுத்தும் ஆர்வம் இருந்தும் அதற்காக அவகாசம் கிடைக்காதவர்கள். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு உயர்மட்டத் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை இழந்தவர்கள்.
இந்த நிலையில் கூச்சல்போட்டு அதான் சொல்வதையோ, சமயக் கிரியைகளை காட்சிக்கு விடுவதையோ, தொழுகை நடத்துவதையோ, பதாதைகளை ஏந்தி சத்தமிட்டு ஆத்திரத்தை வெளிப்படுத்துவதையோ, இப்தார் செய்வதையோ ஒரு பெரிய விடயமாக அவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்க முடியாது.
இனவாதத்தை எதிர்த்து பகிரங்கமாகப் பேசக்கூடாது, குடியுரிமைக்கு உரிய பொதுவான கடமைகளுக்கு முன்செல்லக்கூடாது, பொறுமையாக இருக்கவேண்டும், அல்லாஹ்வின் உதவி வரும்வரை அவனிடம் பொறுப்புச் சாட்டிவிட்டு சும்மா இருந்தால் போதும் என்பன போன்ற உபதேசங்களை கேட்டே குரல் இல்லாமல்தேய்ந்து போனவர்கள். இத்தகைய இன்னும் பல காரணங்களால் அவர்கள் போராட்டத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டனர்.
எவ்வாறாயினும் மக்கள் போராட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளவேண்டியது கட்டாயம். அரசாங்கத்தின் பொருளாதார அடக்கு முறையை திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது கடமை. பிரஜைகள் என்ற வகையில் நாடு ஒரு பேராபத்தை எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சக பிரஜைகளுடன் கூட நிற்க வேண்டியது முக்கியமானது. அதில் எமது சமயக் கிரியைகள் இயல்பாக நடந்துவிட்டுப்போகட்டும். அதனை திட்டமிட்டு அலங்கரித்து, சோடனைபண்ணி, காட்சிப்படுத்தும் போது, அது முன்னர்குறிப்பிட்ட சந்தர்ப்பவாத இனவாத சக்திகளுக்கு வாய்ப்பாக மாறிவிடமுடியும். முஸ்லிம்கள் இதற்காக கூனிக்குறுகி தமது சமயக்கடமைகளை பின்னடிக்கவோ, மறைத்து நடத்தவோ, தவிர்த்துக் கொள்ளவோ அவசியமில்லை. தமது சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு. அதேபோன்று அவற்றை சகித்துக்கொள்ள வேண்டிய பக்குவமும் கடப்பாடும் ஏனையவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் காலி முகத்திடலுக்கோ வேறு ஒரு இடத்துக்கோ முஸ்லிம்கள் வந்திருப்பது ஒரு சமூக அரசியல் கடப்பாட்டை முன்னிறுத்தி என்பதை மறந்து விடமுடியாது.
மெல்ல மேலெழும்பும் இனவாதம்
ஜனாதிபதியின் மிரிஹான வீடு முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கை இனவாதத்திற்கான முதல் சக்திமாத்திரையாக அமைந்திருந்தது. ஒரு குறியீட்டுக்காக அரபு வசந்தத்துடன் தொடர்புபடுத்தி மக்கள் எதிர்ப்பை அவர்கள் விளக்க முற்பட்டிருந்தாலும் அது ஒரு அதிர்வை ஏற்படுத்தி விட்டது. இனவாத ஊடகங்கள் சில அதன் உள்ளர்த்தம் புரியாதவாறு ஒப்புவித்தன. படித்தவர்கள் மத்தியில் இதற்கான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் இதனை பொது மக்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என்பதை துல்லியமாகக்கூற முடியாது.
கடந்த வாரம் பிரதமமந்திரி மஹிந்த ராஜபக்சவின் உரையைத் தொடர்ந்து சிலர் பகிரங்கமாகவே இனவாதத்தை கையிலெடுக்க முயற்சித்தனர். அவரது செய்தி காத்திரமான எந்த உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, பழைய வன்முறையை நினைவுபடுத்தியது. இதனைத் தொடர்ந்து,களனிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் – இனவாத ஏஜன்டுகளில் அடுத்த பிரதானியான டான் பிரசாத் போன்றோர் முஸ்லிம்கள் தமது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பகிரங்க வணக்கங்களில் ஈடுபட்டு இழிவுபட வேண்டாம் என்றும் அச்சுறுத்திப்பேசிய காணொலிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இவை வழமையான ஆதரவைப் பெறவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் குழுவினர் வெளியிட்ட காணொளி ஒன்றை அரசாங்கம் அண்மையில்வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ சிங்கள மக்களிடமிருந்து பாரிய ஆதரவைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு துரும்புகளையும் அவ்வப்போது பாவித்துப் பார்க்கின்றனர்.
எவ்வாறாயினும் – அதிகமானவர்கள் பேசிக்கொண்டிருப்பதால் இனவாதம் மௌனமாக இருக்கின்றது. அரசாங்கத்தின் மீதான அதீத எதிர்ப்பு முஸ்லிம்கள் தொடர்பான அபிப்பிராயத்தில் சிறு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனவாதம் ஒழிந்து போகவும் இல்லை, அவ்வாறு முற்றாக ஒழிந்து போகவும் மாட்டாது. நீறுபூத்த தணல்போல மறைந்து கிடக்கும் இனவாதம் சற்று ஊதினால் இலகுவில் வெளியே வரும். எனவே, மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு முஸ்லிமும் தமது செயற்பாட்டின் எல்லையை புரிந்து செயற்படுவது கட்டாயம். தேசிய சூராசபை இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகள் காத்திரமானவை. அவற்றை ஒரு வழிகாட்டியாகக் கொள்வது சிறந்தது.
வன்முறையற்ற போராட்டம் வன்முறையை நோக்கி நகவர்வதற்கு பெரிதாக எதனையும் செய்ய வேண்டியதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் சற்றுச் சீண்டிப் பார்த்தாலே போதும், வன்முறை தானாக கட்டறுந்து போகும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு நடப்பது சகலரதும் கடமையாகும்.- Vidivelli
அருமையான ஆக்கம். சமகால உண்மைகளை நியாயமாக எடுத்தியம்பியுள்ளது.
ReplyDelete