Header Ads



நாங்களும் அந்த அடிப்படைவாதிகளே - இசைக் குழு தலைவர் நீல் வர்ணகுலசூரிய


அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது அடிப்படைவாதிகள் என அரச ஊடகங்கள் கூறியுள்ளமை தொடர்பில் இலங்கையின் பிரபல இசை குழுவான சன் பிளவர் இசைக் குழுவின் தலைவர் நீல் வர்ணகுலசூரிய இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.

இது உண்மையான கதை எனவும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது பட்டினி அடிப்படைவாதிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். நாட்டில் வாழும் 70 லட்சம் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரச புள்ளிவிபரங்களின்படியே கூற முடியும்.

5 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்காக 70 லட்சம் குடும்பங்கள் வரிசையில் நின்று கிராம சேவர்களிடம் அதனை பெற்றுக்கொண்டனர். மறுபக்கம் நாட்டின் இந்த முறையின் கீழ் மிகவும் செல்வ செழிப்புமிக்க குடும்பங்கள் உருவாகியுள்ளன.

இவர்களில் வீடுகளில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன என்று கேட்டால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன என்பதை அவர்களால் கணக்கிட்டு உடனடியாக கூற முடியாது.

ஆனால், 70 லட்சம் குடும்பங்களிடம் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று கேட்டால், கணக்கிடாமலேயே தமது பையில் 78 ரூபாய் இருக்கின்றது என்று கூறுவார்கள். அந்தளவுக்கு இவர்கள் வறியவர்கள். கடந்த ஏழு, எட்டு வருடங்களிலியே நாடு இப்படியான கஷ்டமான நிலைமைக்கு சென்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலைமையால் பாதிக்கப்பட்டு வீதியில் இறங்கிய மக்களை அரச ஊடகங்கள் அடிப்படைவாதிகள் இந்த புரட்சியை செய்கின்றனர் எனக் கூறின. உலகில் அதிகளவில் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர்.

முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ, சீக்கிய அடிப்படைவாதிகள் என பல அடிப்படைவாதிகளை எம்மால் கூற முடியும். அரச ஊடகங்கள் அடிப்படைவாதிகள் என்று கூறியதே தவிர எந்த அடிப்படைவாதிகள் என்று கூறவில்லை.

உண்மையில் அடிப்படைவாதிகள் தான் இதனை செய்தனர், அவர்களுக்கு எந்த அடிப்படைவாதிகள் என்று பெயரிடவில்லை. இவர்கள் பட்டினி அடிப்படைவாதிகள். இந்த பட்டினி அடிப்படைவாதிகளை ஆதரிக்க ஆதரவு அடிப்படைவாதிகள் சிலர் இருந்தனர். நாங்களும் அந்த அடிப்படைவாதிகளே.

பட்டினியில் இருக்கும் மக்களின் பட்டினி  எப்படி இருக்கும் என்பது எமக்கு புரியும். பட்டினியை நாங்கள் உணராவிட்டாலும் சிரமத்தை உணர்கின்றோம். நாங்களும் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு வீதியில் செல்வோம் என்பது போல் தெரிகிறது.

இன்னும் ஏழு, எட்டு மாதங்களில் எமக்கும் இந்த நிலைமை ஏற்படுமோ என்று எண்ண தோன்றுகிறது. இந்த கட்டமைப்பு இப்படியே சென்றால், அனைவரும் பாத்திரத்தை ஏந்தி பிச்சை எடுக்க நேரிடும்.

இதனால்,தயவு செய்து இந்த அமைப்பை மாற்றுங்கள். கொள்ளையிட முடியாத புதிய அமைப்பை ஏற்படுத்துங்கள். நாங்கள் கொள்ளையிட மாட்டோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துங்கள். அரச வளங்களை கொள்ளையிடாத நிர்வாகம் ஒன்றை கட்டியெழுப்புங்கள் எனவும் நீல் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.