ஆசிரியரின் வீட்டில் 57 பவுண் நகை கொள்ளை - குடுபத்தினர் தூங்கிய அறையை பூட்டிவிட்டு தப்பியோட்டம் - அக்கரைப்பற்றில் சம்பவம்
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில், 54பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதுபற்றி, முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை 1மணிக்கும் 5மணிக்கும் இடையில் இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
ஆசிரியரும் அவரது மனைவியும் அவர்களது ஒரு வயது பெண் குழந்தையும், வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அவர்கள் தூங்கி அறையை பூட்டிவிட்டு மற்றைய அறையை திறந்து அங்கிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரியில் இருந்த மூன்று தாலிக்கொடி அடங்கலாக 54பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
தனது ஒருவயது குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடும் எண்ணத்துடன் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு தூங்கியவர்கள் காலை 5மணிக்கு எழும்பி கதவை திறக்க முற்பட்டுள்ளனர்.
ஆயினும் கதவு திறக்காதபடி பூட்டப்பட்டிருந்ததையறிந்து சத்தம் போட்டு அயலவர்களை அழைத்து, வெளியே வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடப்பதையும் அலுமாரியில் இருந்த நகைகள் காணாமல் போனதையும் அறிந்துள்ளனர்.
அதனையடுத்து அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவலை வழங்கியதையடுத்து அக்கரைப்பற்று பொலிஸார்,அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர், அம்பாறை தடயவியல் விசாரணை பிரிவினர் என பல தரப்பினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment